ஷட்விதமார்கினி ராகத்தில் ஞானமொஸகராதா

Standard

2009 டிசெம்பர் மியூசிக் சீசனில் கச்சேரி விமர்சனங்களை உடனுக்குடன் எழுதுவது என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியதில் (இடையில் அறிவியல் மற்றும் கொளை கதை வேறு) ஓய்வு நேரம் மொத்தமும் செலவாகி, எழுதுவதற்கே பல மாதங்கள் மனத்தடை வந்துவிட்டது. இதில் நஷ்டம் உங்களுக்கு இங்கு குறிப்பிட்டிருக்க வேண்டிய நான் கேட்ட பல நல்ல கச்சேரிகளின் விமர்சனமும் அவைகளில் வந்த சில இசை நல்முத்துகளும்.

அப்படிப்பட்ட இசைமுத்துக்களில் ஒன்று நாதஇன்பத்தில் டிசெம்பர் 2009இல் வேதவல்லி கச்சேரியில் வந்தது.

வயதாகிவிட்டதால் அவரின் சாரீரத்தில் அவ்வப்போது ஏற்படும் ஆயாசங்களையும், தாள இடர்களையும் குறையாக சுட்டிக்காட்ட மனமில்லை. ஏனெனில் வேதவல்லியின் இசையை கேட்டவுடன், அவரின் ராக ஆலாபனையின் சாதகம்செறிந்த கம்பீரத்தையும், சூட்சுமங்களை வெளிக்கொணரும் நளினத்தையும் கேட்டவுடன், மற்றெதெல்லாம் மறந்துவிடுகிறது. அதுவும் ராகமாலிகா விருத்தங்களில் ஆலாபனையில் எந்த ஸ்வரத்தில் ஒரு ராகத்தில் இருந்து வழுக்கிக்கொண்டு, கண்மூடிய ரசிகர்கள் முகம் சுளிக்காமல், அடுத்த ராகத்திற்கு செல்வது என்பது அவருக்கு மட்டுமே தெரியும் சிதம்பர (ஸ்ரீரங்க?) ரகசியம். நான் கேட்டவரை இன்று கச்சேரி சர்கியூட்டில் ஒருவரும் இதை இவ்வளவு நேர்தியாக செய்வதில்லை.

இதோ அவரது தோடி ராக ஆலாபனை சிறு வீடியோ

சுட்டி: YouTube

ஒவ்வொரு பாட்டாக எடுத்து ஆராயப்போவதில்லை. ஒரு பாட்டு மட்டும்.

ஞானமொ ஒஸக ராதா என்று தியாகராஜரின் பிரபலமான கிருதி இருக்கிறது. பூர்விகல்யாணி ராகத்தில் பாடுவார்கள். கேட்டிருக்கலாம். வேதவல்லி அன்று இக்கிருதியை (ஆலாபனைக்கு பிறகு) பாடியது ஷட்விதமார்கினி ராகத்தில்.

வேங்கடமகி வகுத்ததாக இன்று அறியப்படும் 72 சம்பூர்ன மேள ராக பட்டியலில், ஷட்விதமார்கினி 46ஆவது ராகம். சுருக்கமாக, சம்பூர்ன ராகம் என்றால் அனைத்து (ஏழு) ஸ்வரங்களும் அங்கமாக கொண்ட ராகம். சங்கராபரணம், கல்யாணி, தோடி போன்றவை சம்பூர்ன ராகங்கள். சம்பூர்னங்களில் வரும் ஸ, ப, (மேல் ஸ்தாயி) ஸ ஸ்வரங்கள் மட்டும் அனைத்து ராகங்களுக்கும் ஒன்றுதான். பிற ஸ்வரங்கள், ரி, க, ம, த, நி வேறு வேறாக வந்து ராகத்தை வித்தியாசப்படுத்தும். அபஸ்வரம் என்றால் ஒரு ராகத்தில் இருக்கும் ஸ்வரங்களை அவைகளின் ஒலி-இடத்திற்கு பொருந்தாமல் பாடுவது. தவறாக பாடுவது என்றால் ராகத்தில் இல்லாத ஸ்வரங்களை கொண்டுவந்து, ராகத்தையே மாற்றிப் பாடுவது. ஒரு ராகத்தின் அபஸ்வரம் வேறு ராகத்தின் ஸ்வரமாகலாம். இசையில் உலகில் அபஸ்வரமே கிடையாது. பொருந்தாத இடம் மட்டும்தான். அபஸ்வரம் ராம்ஜி ஒப்புக்கொள்ளலாம். இப்போதைக்கு போதும்.

மோஹனம், ஹிந்தோளம், நாட்டை, வராளி போன்றவை சம்பூர்னங்கள் இல்லை. ஏழு ஸ்வரங்களும் இருக்காது. ஆனால், ஸ, ப (அல்லது ம), ஸ அநேகமாக இருக்கும். இவை ஜன்ய ராகங்கள் – ஏதோ ஒரு சம்பூர்ன (ஜனக) ராகத்தின் குழந்தைகள்.

ஏன் 72 (மட்டுமே) சம்பூர்னம் வருகிறது என்பதற்கு விதிகள் இருக்கிறது. பிரிதோர்சமயம் பார்ப்போம். இப்போது ஷட்விதமார்கினி.

ஷட் தமிழ் வார்த்தை இல்லை. ’ஷட்’டை, சட்டை, சட்டி, சூப்பர் இவற்றில் வரும் ஒலியில் படிக்கக்கூடாது. ஷட் = shut. மார்கினியை ஆங்கிலத்தில் margini என்று எழுதி மாரை அடுத்து, bikiniயில் வரும் கினி போல் படிக்கக்கூடாது. அதேபோல் மார்ஜினி என்று மாரை ஜீனி சேர்த்து படிக்கக்கூடாது. ராகத்தை எறும்பு கடிக்கும்.

ஷட்விதமார்கினி என்றால் ஆறு வகை வழிகள் என்று பொருள் வருகிறதே. ஏன்? எனக்குத்தெரியாது. தெரிந்தவர்கள் கூறலாம்.

வேதவல்லி அன்று கேட்டுக்கொண்டபடி, முதலில் கிருதியின் இந்த வடிவத்தை ரசிகர்களின் கேள்விரசனைக்காக இங்கு தருகிறேன்.

[audio:http://unrulednotebook.files.wordpress.com/2010/05/2009-dec-vedavalli-gnanamosagaradha-shadvidhamaargini.mp3%5D

இந்த வடிவத்தை அவர் தன் குரு மதுரை ஸ்ரீரங்கம் ஐயங்காரிடம் கற்றுக்கொண்டதாக கேள்வி. சமீபத்திற்கு சற்று முன், 1960களிலும் இந்த வடிவத்தை கச்சேரிகளில் பாடிவந்தனர் என்கிறார். இது அழியக்கூடாது என்பதற்காகவே உங்களிடம் (அன்று வந்த ரசிகர்களிடம்) சொல்லிவைக்கிறேன் என்றார். ஏன் இந்த கிருதியை இந்த ராகத்தில் பாடவேண்டும் என்பதற்கு வேதவல்லி ஒரு கருத்தை கூறுகிறார். இந்த கிருதியின் வரிகள்

ஞானமு ஒஸக ராதா, கருட கமண வாதா

நீ நாமமுசே நா மதி நிர்மல மைனதி

அதாவது

ஞானத்தை கொடுத்தருளேன், கருட வாஹனத்தவனே

உன் திருநாமத்தின் மஹிமையில் என் மனம் நிர்மலமாகிறது

இப்படிச்செல்கிறது இக்கிருதி.

(தெலுங்கு நண்பர் ”ஞான மொஸகா” என்று பிரித்தால் மொஸகா என்பதற்கு தெலுங்கில் அர்த்தம் லேது. ஒஸகா என்றல்தால் கொடு என்பதுபோல் பொருள் ஒச்சிந்தி என்கிறார். ஆனால் Sep 26, 2010, அப்டேட்டாய், கீழே பின்னூட்டத்தில் ராமசந்திர சர்மா சொல்வதையும் கவனியுங்கள். ஞான மொஸகா தான் சரியாம்.) ஞானத்தை கொடு என்று உள்ளம் உருகி கேட்கவேண்டிய கருத்துடைய பாடலை பூர்விகல்யாணியில், சற்று கம்பீரமாக தொடைய தட்டி பாடுவது பொருத்தமில்லை. ”ஞானத்தை கொடுக்கறயா இல்ல கன்னத்தில் பளார்னு ரெண்டு வைக்கட்டுமா…” என்பதுபோல். இது வேதவல்லி. மேலே ஒலிக்கோப்பில் இறுதியில் கேட்டுப்பாருங்கள்.

பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்கு பாட்டா என்பது, கவிஞர்-எம்மெஸ்வி  காம்பினேஷனுக்கு பிறகு ஏற்பட்ட சர்ச்சை இல்லை. தியாகையர் காலத்திலும், என்றும் இருந்திருகிறது (இப்போது இந்த சர்ச்சை இல்லை. மெட்டுக்குதான் பாட்டு என்று தீர்ப்பு).

ஷட்விதமார்கினி ராகஸ்வரூபம் என்ன? எனக்குப் புரியவில்லை. வேதவல்லி பாடிய கீர்த்தனையில், சங்கதிகள், கமகங்கள், கார்வைகள், பாவங்கள், கீர்தனையின் காலப்பிரமாணம், என்று பார்த்தாலும், கேட்பதற்கு மனதில் சற்று அனுதாபம் வரவழைவைக்குமாறு, இழுவையாக இருந்தது. ஆனால் ராக ஆலாபனையில் இதயெல்லாம் தெளிவுபடுத்தமுடியவில்லை. ஒரு முக்கிய காரணம் கச்சேரிகளில் இதற்கு முன் இந்த ராகத்தை ஒருவர் ஆலாபனை செய்து நான் கேட்டதில்லை. என்னிடம் இருக்கும் இந்த ராகத்தின் ஒரே ரெக்கார்டிங் அவர் காலத்தில் சரியாக போஷிக்கப்படாத ஜீனியஸ் தஞ்சாவூர் எஸ். கல்யாணராமனின் பாட்டு. இரண்டு கலைஞர்களின் ஆலாபனையில் இருந்து மட்டும் மொத்தமாக எனக்கு இந்த ராகத்தின் வடிவம், அதன் ‘ஞானமொஸகராதா வார்த்தைகள் பாடப்படவேண்டிய ஸ்வரூபம்’ முதலியவை புரியவில்லை.

பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன் எழுதியுள்ள ராக லக்‌ஷனங்கள் புத்தகங்களில் ஷட்விதமார்கினியை கண்டுபிடிக்கமுடியவில்லை. ஹேமா ராமநாதன் சிரத்தையாக, பிரும்மாண்டமாக, தொகுத்துள்ள ராகலக்‌ஷனசங்ரஹா rAgalakshanasangraha புத்தகத்தில் இருந்து கோவிந்தாச்சாரியார் எழுதிய சங்க்ரஹசூடாமணி காலத்திலிருந்தே ஷட்விதமார்கினி ராகம் புழக்கமாக இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அப்புத்தகத்தில் இருந்து மொழிபெயற்கப்பட்டுள்ள ராக லக்‌ஷனத்தின் ஒரு வாக்கியம் “…granting the fulfillment of penance, SadvidhamArgini is named the fortysixth (adhikara/mela)” என்று இருக்கிறது.

கிருதியில் உள்ள வார்த்தைக்கு ஏற்றவாறுதான் தியாகையர்  தன் கிருதிகளுக்கு ராகத்தை தேர்வுசெய்தார் என்பதற்கு நேரடி ஆதாரம் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அப்படியே செய்தார் என்று வைத்துக்கொண்டாலும், சோகமோ, சௌக்கியமோ, அதே ராகத்தில் சொல்லமுடியும். அவர் கையாண்டவிதத்தில் அட்டானா ராகம் ஒரு உடனடி உதாரணம். கிருதியின் வார்த்தைகளுக்கேற்றவாறு ராக ஸ்வொரூபம் (ஸ்வர வடிவம்+bAவம்) என்பது கையாளும் கலைஞரின் (அவரின்) சாமர்த்தியம் என்பதை தியாகைய்யரே திட்டவட்டமாக நிர்ணயித்துள்ளார். பூர்விகல்யாணியில் பரலோகசாதனமே மனஸா இயற்றியவர் (கிட்டத்தட்ட ஞானமொஸகராதா பாவமே உள்ள கிருதி), எதற்காக ஞானமொஸகராதாவிற்கு மட்டும் ஷட்விதமார்கினியை தேர்வுசெய்யவேண்டும்? இல்லை பரலோகசாதனமே மனஸா வை ஏன் ஷட்விதமார்கினியில் இயற்றியிருக்கக்கூடாது.

இதற்கெல்லாம் திட்டவட்டமாக பதில் கூறமுடியாது என்றே கருதுகிறேன். ஞானமொஸகராதாவின் ஷட்விதமார்கினி  வடிவம் முன்பு இருந்திருக்கிறது என்று மட்டும் கொள்ளலாம். கேட்பதற்கு எனக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஒத்துக்கொள்வதில் எனக்கு தயக்கமில்லை.

ஆராய்ச்சியை இத்துடன் நிறுத்துவோம். கச்சேரியில் இருந்து மேலும் சில வீடியோக்கள்

ஆஹிரி ராகம் (சுட்டி)

கமாஸ் ராகத்தில் ஜாவளி (சுட்டி)

பின்பாட்டு சுமித்ரா வாசுதேவ். வேதவல்லியின் மாணவி. வளரும் கலைஞர். வயலினில் ரசிப்பவர் ஆர்.கே.ஸ்ரீராம்குமார்.