காப்பாற்றப்படவேண்டிய தமிழ்நாட்டின் சுவரோவியப் பொக்கிஷங்கள்

Standard

சித்திரக்கலையில் மியூரல்ஸ் என்றால் சுவரோவியங்கள் அல்லது சுவர்ச் சித்திரங்கள். கோயில்களிலும் குகைகளிலும் வரையப்பட்டுள்ள பழங்காலச் சுவரோவியங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே ராஜஸ்தானை அடுத்து இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆசியாவில் இலங்கைக்கு அடுத்து புத்த சமண சைவ மதங்களின் சரித்திர முக்கியத்துவம் பெற்ற பல ஓவியங்களைக் கொண்டுள்ளது. பல்லவர்கள், விஜயநகர ராயர்கள், தொடர்ந்து நாயக்கர்கள், பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் என்று ஏழாம் நூற்றாண்டில் இருந்து பதிநேழாம் நூற்றாண்டு வரை ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக 140 தமிழ்நாட்டுக் கோயில்களில் மேல், உள் கூரைகளிலும், பிரகாரச் சுவற்றிலும் சுவரோவியங்கள் விரவியிருக்கின்றனவாம்.

கலையறிவு அதீதமாக இல்லையெனினும், அதைக் கலை என்று புரிந்து மென்மையாக அணுகவேண்டிய மனிதர்களின் பொதுவறிவு கூட இன்றி, பக்தி என்று மஞ்சள்காப்படித்தும், ரெனொவேஷன் என்று சடுதியில் வெள்ளையடித்தும் எனாமலடித்தும் (எனாமலை எடுக்கையில் பின்னால் இருக்கும் சுவரோவியம் இலவசமாக உரிந்து வந்துவிடும்), ரெஸ்டோரேஷன் என்று மாற்றி வரைந்து முதலுக்கே உலைவைத்தும், இவ்வகை சரித்திர-கலைப் பொக்கிஷங்களை நாம் வேகமாக இழந்துகொண்டிருக்கிறோம். போறாக்குறைக்கு இச்சுவரோவியங்கள் உள்ள பல கோயில் பிரகாரங்களில் சுவற்றுக்கருகிலேயே தேங்கும் மதுபாட்டில்கள். இதுவரை இல்லையெனின் விரைவில் கலைகளில் சிறந்துவிளங்கியது மட்டுமின்றிக் கலைகளின் மேல் காட்டும் இவ்வகைத் தேர்ந்த அக்கறையின்மையிலும் முதன்மையான இடத்தை பிடித்துவிடுவோம்.

சிலநாள்கள் முன்னர் சுய-சித்திரக்கலை-பாதுகாவலர் மற்றும் சரித்திரவியளாலர் எம்.வி.பாஸ்கரன் [1], ஐ.ஐ.டி மெட்ராஸில் நிகழ்த்திய விளக்கக் கருத்தரங்கில் பங்குகொண்டேன். அதில்தான் மேல்பத்திகளில் எழுதியிருக்கும் சுவரோவியங்களில் தேர்ந்த நம் புராதான அபாரங்களையும் அதே சுவர்களில் ஒன் பாத்ரூம் செய்யும் நம் சமகால அபத்தங்களையும் பற்றி கேட்க நேர்ந்தது.

ஜாதிமதபேதமின்றி ஆத்தீக-நாத்தீக வெறும் தி.க. பிரிவினை விடுத்து விரைவில் ஒருங்கிணைந்து இக்கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்ற முயற்சிகள் செய்யவில்லை எனின் தமிழ்நாட்டின் அநேக சுவரோவியங்களை நம் சந்ததியர் பாஸ்கரன் எச்சரிப்பது போல (வெள்ளையடிப்பதற்கு முன் எடுத்ததுவரை) டிஜிட்டலாக மட்டுமே அணுக முடியும்.

முதலில் எந்த மாதிரியானப் பொக்கிஷங்களை நம் அன்றாட அலட்சியத்தில் அக்கறையின்மையில் (அபதியில்), கண்முன்னே இழந்துகொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தவரை சுருக்கிவரைகிறேன்.

இந்தியாவில் தொன்மையான சுவரோவியம் அஜந்தா எல்லோரா குகைகளில் இருப்பவை. பள்ளியில் பாடத்திலேயே படித்திருக்கிறோம். வரலாற்றுப் பண்பாட்டுக் கலைச் சிறப்பு வாய்ந்த ஓவியமான மஹாமாயாவை சிலர் பிறகு மஹாராஷ்டிராவரை பயணம் செய்து நேரில் பார்த்துமிருக்கலாம். இவை தோராயமாக கி.மு. 3 ஆவது நூற்றாண்டுகளில் வரையப்பட்டிருக்கும் குகைச்சுவரோவியங்கள் (கலையுலகின் பியூரிஸ்ட் அஜந்தாவிற்குப் பிறகு இந்தியாவில் சித்திரக்கலையே தேய்பிறைதான் எனக் கூறுவர்).

அஜந்தாவில் இருந்து சுவரோவியங்கள் வடக்கிலும் தெற்கிலும் பல நூற்றாண்டுகளாய்ப் பரவியுள்ளது; புத்த மற்றும் சமண மதத்தின் பரவலைச் சார்ந்து. பிறகு கர்நாடகம், ஆந்திரா தமிழ்நாடு என்று பல்லவர்கள், தஞ்சாவூரில் பிரஹதீஸ்வரர் கோயிலில், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழர்கள் வரைந்தவை, கூன்பாண்டியன் சமணத்தில் இருந்து ஞானசம்பந்தரால் சைவத்திற்கு மாறியது, விஜயநகர ராயர்கள், பின் வந்த நாயக்கர்கள் எனத் தொடர்ந்து (தஞ்சாவூர் உட்பட பல இடங்களில் சோழர்களின் ஓவியங்களின்மேல் நாயக்கர்கள் அன்றே ‘ஓவர்பெயிண்ட்’ செய்தும் இருக்கிறார்கள்), பின் கேரள ஓரத்தில் சேரர்கள் செய்தது, சமகாலத்தில் நாம் இச்சுவர்களின் மேல் செய்யும் கரிக்கட்டை கிறுக்கல்கள், மஞ்சள்காப்புகள், வெள்ளையடிப்புகள்… சுவரோவியங்களின் கலைச்சரித்திரம் தொடர்கின்றது.

[குறிப்பு: தமிழ்நாட்டின் சுவரோவிய வளர்ச்சி பற்றிய என் சுருக்கத்தில் காலம், எதற்கு பின் எது என்று இக்கட்டுரையில் சரித்திரச் சான்றோடு தெரியப்படுத்துவது நோக்கமல்ல. எனக்குத் தெரியவும் தெரியாது. பின்குறிப்பைப் பார்க்கவும்].

கலம்காரி எனப்படும் ஆந்திராவில் இன்றும் உயிரோடிருக்கும் துணியில் வரையும் பிரமிப்பான சித்திரக்கலையும் இவ்வகை சுவரோவியங்களின் கூடவே வளர்ந்திருக்கிறது. இரண்டிற்கும் பல ஒற்றுமைகள், சில வித்தியாசங்கள். வரைகலை, நிறம் குழைப்பு என்று டெக்னிகல் சமாசாரங்களை விடுத்து ஆச்சரியங்களைப் பார்த்தால், கலம்காரி ஓவியங்கள் வரையும் துணிகள் சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கெடாமல் இருக்குமாம். கிட்டத்தட்ட 20 தலைமுறைகள். சிமெண்ட் கட்டடங்கள் 50 வருடத்தில் விரிசலடைகின்றன. கலர் போட்டோ பிரிண்ட் குவாலிட்டி 50 வருடத்தில் இளித்துவிடுகிறது. தேவையான வெள்ளி கலப்பு இருக்குமேயானால் கருப்பு-வெள்ளை போட்டோக்கள் நூறு வருடங்களுக்குப் பிழைக்கலாம். எது கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பம் என்பதில் நமக்குப் பெரும் குழப்பம் இருக்கிறது. இன்று கலம்காரி துணிவகைகளை நாம் பிரதானமாக அலங்காரப் படுக்கை விரிப்பாய்ப் பயன்படுத்திவருகிறோம்.

பல்லவர்களின் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டு சுவரோவியங்களில் தொன்மையானது (ஏழாம் நூற்றாண்டு வாக்கில்). பிறகு பனமலை, தேவி தலகிரீஸ்வரர் கோயில். இங்குள்ள உருவவழிபாட்டுச் சுவரோவியங்கள் அஜந்தாவின் மஹாமாயாவை விடச் செரிவானவை என்று கலைவிமர்சகர்கள் கருதுகிறார்களாம். பிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் சித்தன்னவாசல். பல்லவர்களோ பாண்டியர்களோ யார் செய்திருந்தாலும் சமண தீர்தங்கரர்களின் தாமரைக்குள ஓவியங்கள் அழகானவை அற்புதமானவை. பிறகு அர்மாமலை சமணக் குகைகள், சமணம் வீழ்ந்து சைவம் வைணவம் பக்திவழிகள் தமிழ்நாட்டில் பெருத்த பின்னர் தோன்றிய தஞ்சாவூர் நாட்டியச் சித்திரங்கள் (நாயக்கர்களின் மேலோவியத்தை நீக்கினால் கீழே சோழர்களின் ஓவியங்களாம்), விழுப்புரம் அருகில் திருப்புலிவனம் – சமீபத்தில் வெள்ளையடித்துவிட்டார்களாம்; கேட்டால் எச்சாரென்ஸியே ஓவியங்கள் ஏதும் இருந்ததேயில்லை என்று சாதிக்கிறார்களாம், பாஸ்கரன் பதைத்துச் சொன்னார்.

அடுத்த ரெஸ்டோரேஷனுக்கு முன்னால் இந்தக் கோயில்களையெல்லாம் கோடை விடுமுறைகளிலாவது ஒரு எட்டு போய் பார்க்கவேண்டும் என்று முடிந்துகொண்டுள்ளேன்.

இப்போது காப்பாற்றல் முயற்சி பற்றி.

பாஸ்கரன் செய்துகொண்டிருப்பது தமிழ்நாட்டு சுவரோவியங்களின் ஒரு விஞ்ஞான ரீதியான, விஸ்தாரமான, சிரத்தையான, டிஜிட்டல் மறுபதிவு. பட்டேல் ஸ்பாட்டாக மனதிற்குப் பிடித்த படங்களை மட்டும் எடுக்கும் சுற்றுலா சுய உலா க்ளிக்குகள் போலில்லை இது. ஒவ்வொரு கோயிலிலும் உள்ள அனைத்துச் சுவரோவியங்களையும் டிஜிட்டலாகப் படம்பிடித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை போர்ட் ஃபௌண்டேஷன் கிராண்ட் (பின்குறிப்பு [3] பார்க்கவும்) கைகாசு (அடுத்த பலவருடங்களாக) செலவுசெய்து 37 கோயில்கள் முடித்திருக்கிறாராம். மொத்தம் 142டையும் முடித்துவிட மனத்தளவில் தீர்மானத்தோடு இருக்கிறார்.

இவரது பணியை டிஜிட்டல் பிரஸெர்வேஷன் மற்றும் ரெஸ்டொரேஷன் எனலாம். இந்தக் கணினி சுவரோவிய அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும், அவற்றின் சுவர் கூரைப் பகுதிகளுக்கும் a1 c6 என்று ஆல்ஃபாநியூமரிக் குறியீடு கொண்ட லேபிள் உண்டு. ஒரு சுவரோவியத்தை இந்த லேபிள்களைக் கொண்டு a4 பக்க அளவு கொண்ட (காமிராவில் நேர்த்தியாகப் படம்பிடிக்கமுடிகிற அளவு) பல சிறு டிஜிட்டல் போட்டோப் பகுதிகளாகப் பிரித்துச் சேகரிக்கிறார். இந்தப் படங்களை போட்டோஷாப் போன்ற மென்பொருள் கொண்டு இமேஜ் ஸ்டிட்சிங், கலர் கரெக்‌ஷன் செய்து நிஜ அளவு ஓவியமாகத் தைத்து ஒட்டிவிடுகிறார். வேண்டிய இடங்களில் தேவையான மாற்றம் செய்து (இதைப் பிறகு விளக்குகிறேன்). எந்த ஓவியத்தின் எந்தப் பகுதியை மட்டுமும் கணினியில் மீட்டுக்கொள்ள முடியும். அதற்கானச் செய்தியை (ஏற்கெனவே உள்ளிட்டிருந்தால்) அணுக முடியும்.

உதாரணத்திற்கு, கீழே உள்ள படத்தைப் பாருங்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் திருப்புடைமருதூரில் உள்ள ஒரு கோயில் சுவரில் இருந்து டிஜிட்டலாக மாற்றியச் சுவரோவியம். ஒரிஜினல் ஓவியம் 20 அடி x 12 அடி, 240 சதுர அடி அளவு. இந்த ஓவியத்தைப் பல A4 தாள் அளவுப் படங்களாகப் பிடித்து ஒட்டியிருக்கிறார். டெக்னிக்கல் விளக்கங்களுக்கு இந்த வலைப்பக்கத்தை [http://web.mac.com/mvbhaskar/Naayakaa/Temple_Mural_Paintings.html] அணுகவும். நடுவில் கருப்படித்திருக்கும் இடத்தில் பிலாஸ்டர் இருந்திருக்கிறது.

இம்முறையின் சாத்தியங்கள் பல. உதாரணத்திற்கு, ஒரு கோயிலின் சுவரோவியங்களை அதன் கலையழகோ, சாரமோ, ரசிக்கும் அனுபவமோ எந்தவிதத்திலும் குறையாமல் உட்கார்ந்த இடத்தில் கணினியிலேயே பெறமுடியும். உலகில் எந்த இடத்திலிருந்தும். அடுத்த மஹாசம்ரோக்‌ஷன   வெள்ளையடிப்பில் ஒரிஜினல் சுவரோவியங்களோ, அடுத்த தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தில் முழுக் கோயிலோ காணாமல்போனாலும் கூட இந்த டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் நம் கலைப் பொக்கிஷங்களைக் காப்பாற்றியிருக்கும். வேண்டியபோது வெக்டர் கிராபிக்ஸை வேண்டிய சைஸில் ‘ஸ்கேல்’ செய்து, மீண்டும் கலம்காரி துணியிலோ, கட்டம்போட்ட சட்டையிலோ, கதவுகளிலோ வரைந்துகொள்ளலாம். சரியான சித்திரக்கக்லைஞர் அங்கு மாட்டினால், அமெரிக்காவில் இருந்தபடியே.

பாஸ்கரனே மேலே உள்ள ஓவியத்தைக் கலம்காரி கலைஞர்கள் கொண்டு கலம்காரி துணியில் வரையச்செய்திருக்கிறார். சுவரோவிய ஒரிஜினலை கலம்காரியில் ரெஸ்டோரேஷன் செய்திருக்கும் இந்தத் துணியை கருத்தரங்கின் வாசலில் விரித்துக் காட்சியாக வைத்திருந்தார். கீழே படங்களில் பாருங்கள்.

இந்த ஓவியம் சொல்லும் கதை நமக்கு தெரிந்ததுதான். இடது மேல் ஓரத்தில் கூன்பாண்டியன் சூலைநோயால் அவதிப்பட்டுத் தமக்கையின் பரிந்துரையில் ஞானசம்பந்தரை நோய்தீர்க்கத் தலைநகருள் அழைக்கிறான். சம்பந்தரின் சைவ மதத்தைப் பிடிக்காத சமணர்கள் இதை வெறுக்கிறார்கள். சம்பந்தரின் நூல்களை நெருப்பிலிட்டும் வைகையிலிட்டும் அழிக்க முடியாமல் போவது இடதுபக்கத்தில் அடுத்துக் கீழே உள்ள பகுதிகளில் வரையப்பட்டுள்ளன. கீழே தனித்தனி படங்களாகக் கொடுத்துள்ளேன்.

பிறகு சம்பந்தரின் வீடே நெருப்பில் போய்விட, காரணம் பொறாமைகொண்ட சமணர்கள்தான் எனக் கருதி அவர்களைக் கழுவேற்றும் பகுதி ஓவியத்தின் வலது அடியில்.

கதையை நம்புகிறோமோ இல்லையோ, சமணம் தேய்ந்து பாண்டிய (தமிழ்) நாட்டில் சைவம் தழைக்கத்தொடங்கியது என்று கருதலாம்.

ரெஸ்டோரேஷன் செய்வதற்காக, எந்த அளவாகவும் பெரிதாக்கக்கூடிய ஸ்கேலபிள் வெக்டர் இமேஜாக இந்த மொத்த ஓவியத்தையும் பாஸ்கரனும், ராமச்சந்திரய்யா என்ற கலம்காரி கலைவல்லுனரும், பாஸ்கரனின் பயணங்களுக்கும் ரெஸ்டொரேஷன்களுக்கும் உறுதுணையாய் இருந்துவரும் ஸாம்சனுன் வரைந்துகொண்டிருக்கிறார்களாம். சில பகுதிகளை கருத்தரங்கில் ஸ்கேல் செய்து காண்பித்தார். ஸாம்சன் பல மாதங்கள் தொடர்ந்து வரைந்ததால், தூங்கும்போதும் தன்னிச்சையாக கைநடுங்க ஆரம்பித்து, தற்சமயம் இந்த ப்ராஜக்டை நிறுத்திவைத்துள்ளனர். இந்த டிஜிட்டல் ரெஸ்டொரேஷனின் சாத்தியங்களை விளக்க மற்றுமொரு உதாரணம் கீழே.

இதில் இடப்புறம் இருப்பது ஒரிஜினலின் இன்றைய கோலம். வலப்புறம், வேறு பல இடங்களில் இருந்த இதே போஸின் (pose) ஆதாரங்களுடன் டிஜிட்டலாக கலம்காரி கலைஞர்கொண்டு பாஸ்கரன் வரைந்து பூர்த்திசெய்துள்ளது. முதல் கட்டம் ஒரிஜினல் சுவரோவியத்தை (ரெஸ்டோரேஷன் தேவைப்பட்டால், செய்து) சிரத்தையாக டிஜிட்டலாக மாற்றுவது. பிறகு கலம்காரி கலைஞரை வைத்து டிஜிட்டலில் இருந்து துணிக்கு ஓவியத்தைக் கையால் வரைந்து மாற்றுவது. இதில் கலம்காரி கலைஞர் மொத்தமாக ஓவியத்தை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, டிஜிட்டல் ரெஸ்டோரேஷன் போதும் ஆலோசகராய் உதவி செய்வாராம்.

இவ்வகையில் தான் செய்திருக்கும் அழகர் கோயில் சுவரோவியங்களின் டிஜிட்டல் கலெக்‌ஷனை கருத்தரங்கில் மாதிரிகள் காண்பித்து விளக்கினார். அழகர் கோயிலில் உள் வெளிப் பிரகாரங்களில் சுவர்கள் மற்றும் கூரைகளில் சுவரோவியங்கள் இருக்கின்றன. அனைத்தும் ராமாயணம்; தெலுங்கு கலந்த அந்தக் காலத் தமிழில், குறிப்புகளுடன். தேவர்களும் முனிவர்களும் விஷ்ணுவிடம் சென்று ராமராக அவதாரம் செய்து திருக்குட்டங்குடி ராவணனை அழிக்குமாறு வேண்டும் ஆச்சரியமான ராமாயணம். பாஸ்கரன் கடந்த ஐந்து வருடங்களாக பல அறிஞர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம், திருக்குட்டங்குடி எங்கு இருக்கிறது, தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா, அதில் யார் இந்த ராவணன் என்று. சரியான பதிலில்லையாம்.

அழகர் கோயில் சுவரோவியத்தில் இருப்பது வால்மீகியோ, கம்பரோ, துளசிதாஸரோ வகுத்த ராமாயணம் இல்லையா? ஆந்திர தோல்பாவைக்கலைஞர்கள் வாய்வழியே பரப்பிப் புழங்கி வந்த நாட்டுப்புற ராமாயணம் போல வேறு வகையா? தமிழ்நாட்டில் நிஜத்தில் தொலைத்த இவ்வாறான பலதை வெளிநாடு போய் ஏட்டில் தேடாமல், இங்கேயே கண்டுதெளிய, தெளிவிக்க, தெரிவிக்க, செய்யப்படவேண்டிய பல ஒரிஜினல் பீஎச்டீக்கள் காத்திருக்கின்றன.

அழகர் கோயில் பிரகாரங்களை நான்குமுறைச் சுற்றி வந்தால் (உள் வெளிப் பிரகார சுவர் மற்றும் கூரையை முறையே ஒவ்வொறு சுற்றிற்கும் பார்த்தபடி வலம் செய்தால்) ராமாயணக் கதை முழுவதும் சுவரோவியங்களாகக் கண்முன் விரியும். இந்த பிரமிக்கும் ‘ஸ்டோரி போர்ட்டை’ பாஸ்கரன் டிஜிட்டலாக ஆப்பிள் மாக்புக்கில் வைத்து மாதிரி காண்பித்தார். சாத்தியங்கள் வரவேற்கின்றன.

மேலே அழகர் கோவிலின் கூரைஓவியங்களின் ஒரு பகுதி.

ஏன் இவற்றை அழிக்கிறோம் நாம் என்பதற்குப் பல முரண்பாடான காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, நாத்திக கருத்துடைய பெரியார், மற்றும் பின்பற்றியவர்கள், கோயில் வாசல்வரை வந்துச் செருப்பு மாலை போட்டார்களே தவிர, கோயிலினுள் இவ்வகைச் சுவரோவியங்களை அழிக்க எத்தனிக்கவில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் ஆட்சியில் இருக்கையில் இக்கோயில்களுக்கு ‘விசிட்’ செல்லும்முன்னர் அறங்காவலர்களே ரெனொவேஷன் என்ற பெயரில் சகட்டுமேனிக்கு வெள்ளை அடித்துவிடுகிறார்கள். இது ஒருவகை முரண்.

மேலே நாயக்கர் காலத்தின் சுவரோவியம் கொண்ட திருநெல்வேலி கோவில் தாமிரபரணி நதிக்கரையில் இருக்கிறது. ஏழெட்டு அடி தடிமன் கொண்ட சுவர்களைக் கொண்டது. பரணியின் வெள்ளச் சீற்றத்தில் இருந்து ஊர்மக்களைக் காப்பாற்றும் புகலிடமாய் இருந்திருக்கவேண்டும். இங்கு ஐந்தாவது மாடியில் சுவரோவியங்களுக்கு அருகில் இன்று மதுபாட்டில்கள். ஓவியங்கள் மேல் கிறுக்கல்கள். புகலிடத்தையே பதம்பார்க்கும் தமிழ்ச் சமுதாயம் நாம். இது அடுத்த முரண்.

இவற்றைக் காப்பாற்ற அரசு நிதியுதவி செய்யாமல் இல்லை. நிறைய செய்கிறது. உதாரணமாக, சுவரோவியங்களை ஆராய முற்பட்டால் அரசு நிச்சயம் உதவிசெய்கிறது. உதவியைப் பெற்றுக்கொண்டு பல நேரங்களில் ஆராய்ந்து கண்டவற்றை — அற்புதங்களை — முனைவர் ஏடாக பல்கலைக்கழக நூலகங்களில் கிடப்பில் பாதுகாத்துப் பூட்டிவிடுகிறோம். பொதுமக்கள் பணத்தை அரசுவழியாக உபயோகித்து அதன் பலனை, வாழும் நிலத்தின் கலையின் சரித்திரங்களை, பெருமைகளை, பொதுமக்களுக்கு எட்டா உயரத்தில், அணுகமுடியாத புத்தகங்களில், விளக்கங்களில் புதைத்துவிடுகிறோம். இது மற்றொரு முரண்.

இதிலும் கொசுறாக அறிவுசார்ந்து இரண்டு முரண்கள் உள்ளது. சுவரோவியங்களைப் பல வருடங்களாக ஊறி, ஊன்றி, லட்சக்கணக்கில் படம்பிடித்துள்ள நம் பாஸ்கரன் தோளில் கைபோட்டு, லோக்கல் சென்னை தமிழ் கலந்த மொழியில் இச்சுவரோவியங்களின் பெருமைகளையும், அதன் சிதிலங்களையும் சொன்னால் செவிமடுக்கமாட்டோம். வாயில் நுழையாத பெயர்கொண்ட அயல்நாட்டுப் பேராசிரியர் அல்லது பில்கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து (எய்ட்ஸ் தமிழர்களிடம் தோன்றியதா என்று ஆராய முற்பட்டு) யாரவது வந்து நிக்கான் காமிராவில் படம்பிடத்து வழுவழுதாளில் டாலரில் நம் பொக்கிஷத்தை நம்மிடமே விற்றால் வாங்கிக் ‘காபிடேபிள்’ புத்தகமாக வைத்துச் சிலாகிப்போம். நமக்கே சர்வநிச்சயமாய் நம் அறிவில் ஆராய்ச்சிகளில் இருக்கும் அவநம்பிக்கை. இது முதல் கொசுறு முரண்.

இரண்டாவது முரண் வித்தியாசமானது. அரசு நிதியுதவியில், படம்பிடித்து, ஆனால் விலை குறைவாகப் புத்தகம் வேண்டும் என்று, மலிவான தாளில் அச்சடித்து விற்போம். சில வருடங்களில் சுவரில் உள்ள ஒரிஜனலைக் காட்டிலும் ஓவியத் தாள் மங்கிவிடும். கூடவே பாண்டிச்சேரியின் பிரென்சு இன்ஸ்டிடியூட் பொருளுதவியுடன் நீடித்து இருக்கும் வழுவழுதாளில் நேர்த்தியான பல போட்டோக்களுடன் (கூடவே மின்தகட்டில் டிஜிட்டல் படங்கள்), நிறக்குழைப்பு, வரையும் விதங்கள், தூரிகைகள், ஸ்டைல் என்று தஞ்சைப் பெரியகோயில் கங்கைகொண்டசோழபுரத்தின் சுவரோவியங்களின் தாத்பர்யங்களைப் பிரித்து எழுதியுள்ள தலையனை அளவு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. பிரெஞ்சு மொழியில்.

எந்தக் கோயிலின் செல்வாக்கு பெறுகுகிறன்றதோ அங்கு இச்சுவரோவியங்கள் ரெனொவேஷன், ரெஸ்டோரேஷன் என்று அநேகமாகச் சிதிலமாகிவிடும். கீழவாசல் கோபுரத்தை வெள்ளை பெயிண்ட்டடித்தும், மற்ற கோபுரங்களின் பொம்மைகளை எனாமல் அடித்தும் ‘ரெஸ்டோர்’ செய்யப்பட்ட அரங்கமாநகருளானின் விசுவாசி நான். தெற்கு வாசல் ராயர் கோபுரம் பூர்த்தியான பின்னர் இலங்கை அழியும் என்று ஐதீகம் இருந்தது. அது நடந்ததோ இல்லையோ, புதுப் புகழ்வெளிச்சத்தில், வெளியூர் பக்த கோடிகள் ஆதரவில், நிச்சயம் 1985 முன்னர் இருந்த ஸ்ரீரங்கம் என் கண்முன்னே அழிந்துவிட்டது.

இதுவரை அரசு 17 சுவரோவியக் கோவில்களை இவ்வாறு ரெஸ்டோரேஷன் செய்திருப்பதாகச் செய்தி இருக்கிறது. பாஸ்கரன் ஒன்றில்கூட இவை சரியாக செய்யப்படவில்லை என்கிறார். ஆதாரத்திற்குப் புது பெயிண்டில் இருக்கும் சில படங்களைக் காண்பித்தார். சித்திரக்கலையைப் பற்றிப் பெரிதாகத் தெரியாத எனக்கே பார்த்தவுடன் அவற்றின் கேவலம் புரிகிறது.

இப்படியே பல படிமங்களில் முரண்கள் இருக்கின்றன, நம் கலைச்சின்னங்களை நாமே அழிக்கும் வழிமுறைகளாக.

தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

பாஸ்கரன் செய்துவரும் டிஜிட்டல் ரெஸ்டொரேஷன் மற்றும் பாதுகாப்பு நிச்சயம் ஒரு வழி. இந்த டிஜிட்டல் கலைச்சொத்தை நாலட்ஜ்-காமன்ஸ் எனப்படும் அறிவுப்பொதுவுடைமை அங்கீகாரத்தைப் பெறச்செய்யவேண்டும். மக்களால் செய்யப்பட்டு, மக்களால் போற்றப்படும் கலைச்சின்னங்கள், நிச்சயம் பொதுமக்களுக்குச் சொந்தம். இதை எவ்வகை அதிகாரம் கொண்டும் தனிமனிதன், தனி நிறுவனங்கள் (கல்வி நிறுவனங்கள் உட்பட), சொந்தம் கொண்டாட முடியாது. இதற்கு இந்தியாவின் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு செம்மையான சிவில் நாலட்ஜ்-காமன்ஸ் சட்டங்கள் இயற்றப்படவேண்டும். ஏற்கெனவே இச்சட்டங்கள் இருந்தால் அனைவரும் தெரிந்துகொள்ளுமாறு (பரப்பி) வெளிப்படையாக்க வேண்டும். கலையைச் சேதாரம் செய்பவர்களை (வெள்ளையடிப்பவர்கள் உட்பட), அழிப்பவர்களை தண்டனைக்குள்ளாக்க வேண்டும். உண்ண உணவு, உடுக்க உடை, ஆபரணங்கள் கொடுத்து அவர்களை பசித்த புலியிடம் விட்டுவிடவேண்டும்.

அடுத்து இந்தியாவின் ஆர்கியலாஜிகல் ஸொசைட்டி. சில நல்ல விஷயங்களை செய்துவருகிறது. அரசு சான்றிதழ் வைத்திருக்கும் சரியான கலைஞர்கள் கொண்டு சரியாக ரெஸ்டொரேஷன் செய்கிறார்கள். நல்ல உதாரணம் தஞ்சைப் பெரியகோவில். சுவரோவியங்கள் இருக்கும் இடத்தை அருங்காட்சியகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் சிலகாலத்திற்கு அணுகமுடியாது. அயல் நாட்டு டிக்னிடரிஸ் மட்டும் அலௌடு.

இவ்வகைப் பாரபட்சம் இருந்தாலும், ரெஸ்டோரேஷன் வேலையைத் துப்புரவாக செய்துவருகிறார்கள் என்று பாஸ்கரன் கூறினார் (இவருக்கும் படம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாம்). ஆனால் அனைத்து கோவில்களையுமே ASIயிடம் விட்டு இவ்வாறு உள்ளே போகமுடியாத ஆராய்ச்சிக் கூடங்களாக மாற்றுவதில் பயனில்லை. மக்கள் வரவேண்டும். வந்து நம் கலைகளைப் பார்த்து, மென்மையைத் தொண்மையை உணர்ந்து பாதுகாக்கச் சுயக்கட்டுப்பாட்டுடன் முன்வரவேண்டும். திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்…

தேவையான கூட்டத்துடன் பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என்று பலரும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகையில் உவகை, பிரமிப்பைக் கடந்து, எச்சாரென்ஸி, கலைப்பாதுகாவலர்கள், சேகரிப்பளர்கள், பக்தர்கள், வெளிநாட்டில் கோயில் கட்டி உள்ளூர் குருக்களை விண்ட்-பிரேக்கர் அணிவித்து இடம்பெயர்க்கும் புலம் பெயர்ந்தத் தமிழர்கள், என் போன்ற அகடெமிக் மேம்போக்காளர்கள் என்று சகட்டுமேணிக்குத் தமிழ்ச் சமூகத்தின் பல மட்டத்தினரின் அலட்சியத்திற்கும், அக்கறையின்மைக்கும் நானே பொறுப்போ என்ற துக்கம் கலந்த குற்ற உணர்ச்சியே மேலோங்கியிருந்தது. ஒரு வாரம் கழிந்து சுரணை விட்டுப்போய், இப்போது மனதில் லேசான நமைத்தல் மட்டும் மிச்சம்.

பாஸ்கரன் போன்றோரால் வெறியுடன் மொத்த சுவரோவியங்களையும் டிஜிட்டலாக காப்பாற்ற யோசித்து செயலாற்றவும் முடியும். என் போன்ற கையாலாகத ஆசாமிகளின் சுரணையற்ற நமைச்சலால் முடிவது இந்தக் கட்டுரையும், சுவரோவிய கோயில் சுவர்களில் மஞ்சள்காப்போ, உச்சாவோ அடிக்காமல் இருப்பதும்.

*****

Notes

[1] பாஸ்கரன் இந்த கட்டுரையை படித்துவிட்டு மிநஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் தன்னைப்பற்றி கலைப்பாதுகாவலர் என்று நான் கூறுவதை மறுக்கிறார். தன்னைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: I am not a conservator nor an art historian. I am essentially uneducated, a college drop-out. It is not as if I have been interested in this all my life either. 5 years ago I got a chance to get involved in this project initiated by someone else. I was the archivist and the default custodian of the material captured. I realised that as long as temples lay in ruins elsewhere in their own place, it was possible to ignore them. But having brought all of it home, in a hard drive, and as proximate as the ruins lay, it became impossible to ignore them. So I continued the work, continued it long after everyone else had left the project…

[2] மேலும் கட்டுரையில் பல இடங்களில் நான் செய்திருந்த பிழைகளையும் தன் மின்னஞ்சலில் சுட்டிக்காட்டி திருத்தினார். சில பத்திகளை இப்போது சரிசெய்துள்ளேன்.

[3] The original project was funded by the Ford Foundation. The grantee was the Centre for Plants, People and Ecosystems, a Chennai-based not-for-profit trust. The project director was Dr. Balusami, Heaod of the Department of Tamil, Madras Christian College. See full credits here: http://web.mac.com/mvbhaskar/Naayakaa/Credits.html