டுவிட்டர் குறள்கள்

Standard

திருக்குறளுக்குத்தான் எத்தனை பிரேமை தமிழ்கூறும் இணையுலகில். பத்தாவது பப்ளிக் எக்ஸாமில் அதிக மார்க் வாங்கவேண்டுமென்று பிற மொழிக்காக ஒன்றாவதிலிருந்தே தமிழை ஒதுக்காமல் பள்ளியில் ஒருபாடமாக படிக்கும் அநேகருக்கு முதல் மனப்பாடப்பகுதி குறள்தான். தமிழ் மத்தியமர் பலரின் முதல் இலக்கிய பகடியும் அங்குதான் தொடங்குகிறது.

அகர முதல எழுத்தெல்லாம் தகர ஸ்லேட்டில் எழுத வேண்டும் என்பதில் தொடங்கி, பெரியவர் ஆகி அலுவலகத்தில் டை கட்டி வாழ்வாரே வாழ்வார் மற்றவர் கைகட்டி பின் செல்வர் என்று நொந்துகொள்வது வரை குறள்தான் சுலப சுவைநீட்டல்களுக்கும், அவசர கவிதை  சிதிலங்களுக்கும் வாகானது.

இணையத்திலும் தமிழில் எழுதவரும் பலர், தம்வீட்டு நாய்குட்டி, எதிர்வீட்டு குட்டி என்றெல்லாம் சொந்த நிகழ்வுகளின் சாதாரணங்களை சமகால இணைய இலக்கியமாக சாசுவதமாக்க மனதில்லாமல், முன்பின் பார்த்திராத வாசகக் கோடிகள் முகம் கோணாதிருக்க எதையாவது உபயோகமாக எழுத முயற்சிசெய்து, அதற்கு அகர முதலாக குறளை ஒருதரம் ஏதாவது செய்வர். பெரிதும் சிறிதுமாக உள்ளிட்டோரின் அவகாசம், அவசரம், ஆச்சர்யம், ஆயாசம் பொருத்து தமிழ்வலையில் நிறைய வகையில் இருப்பது குறள்தான்.

டுவிட்டர் (http://twitter.com) என்று ஒரு மைக்ரோ-பிளாகு விஷயம் இருக்கிறது. இணையத்தில் என் blogகில் இக்கட்டுரையைப் படிக்கும் உங்களுக்குத் டுவிட்டர் பற்றியும் தெரிந்திருக்கலாம். பிளாகை வலைப்பூ என்றால், டுவிட்டர் வலை மொட்டு. துண்டுப் பிரசுரமாக (ஆங்கிலத்தில்) 140 குறிகளுக்கு மிகாமல் இலக்கியம் வடிக்கலாம். அரட்டை அடிக்கலாம். அறிமுகத்திற்காக என்று, நண்பர்கள் சிலர் கணகாரியமாய் இதிலும் குறளை டுவிட்டிக்கொண்டிருக்கின்றனர். இதன் பயன் எனக்குச் சரியாகப்புரியவில்லை. ஆனாலும் நல்ல காரியம்தான். டொஸ்க் சொல்வானேன்.

இணையத்தமிழெழுத்துச்சோதியில் நாமும் கலந்துவிட எத்தனிப்பதால், குறளை நாமும் ஏதாவதுசெய்யவேண்டும் என்று மனதின் ஓரங்களும் கீபோர்டிக்கும் விரல்நுனிகளும் ஏகோபத்தியமாக நமநமக்க, தீவிரமாக யோசித்து ஒன்றும் தோன்றாமல் டுவிட்டர் ஓடையாலான கணினித்திரையை வெறித்துக்கொண்டிருந்ததில் சற்று எதிர்மறையாக யோசனை. டுவிட்டரில் குறள் விடுத்து, குறளில் டுவிட்டர் பற்றி செய்தால் என்ன.

முயன்றதில், ஒரு அதிகாரம் அளவுக்கு ஒரிஜினல் குறளையே சிதைத்து செய்ய முடியும் என்று தெரிந்தது. டுவிட்டரில் உடனுக்குடன் ஏற்கனவே இந்த டுவிட்டர்குறள்களை வெளியிட்டுள்ளேன். இப்போது கட்டுரையில்.

பரிமேலழகர், கலைஞர், சுஜாதா என்று யாரும் இதற்கு நிச்சயம் விளக்கவுரை எழுதச் சம்மதிக்கமாட்டார்கள் என்பதால், அடியேனே அதையும் செய்துவிடுகிறேன். இணையத்தமிழிலக்கியவாதியாவதற்கான குறைந்தபட்ச தகுதி இவ்வகை குறள்சேதார அகராதித்தனத்தில் கிடைத்துவிடுமென்பதால், பத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். டுவிட்டரின் ஆதாரமான விஷயத்தையும், ஞாபகத்தில் இருக்கும் குறள்களின் சந்த வசதிக்கேற்பவும் மேலும் 20, 30 செய்யலாம். சலிப்பில் நிறுத்திவிட்டேன்.

இனி டுவிட்டர் பற்றி குறளாக, டுவிட்டரதிகாரம். இலக்கியானுபவ மாறுதலுக்காக, முதலில் விளக்கவுரை. பிறகு குறள்.

டுவிட்டர் என்பது மைக்ரோ-பிளாகு. இணைய பிட்நோட்டீஸ் உள்ளீட்டுத் தளம். எப்படி தட்டி கொட்டினாலும், 140 குறிகளுக்கு மேல் ஒரு டுவீட்டில் சொட்ட முடியாது. அதாவது,

எண்ணென்ப வலை எழுத்தென்ப ஈரெழுவது

கண்ணென்ப டுவீட்டும் உயிர்க்கு

இணையத்தில் ஒருங்கான எழுத்து கடினம். உதாரணமாக, ஏதோ ஹாஸ்யத்திற்காக எழுதினாலும் இந்தகட்டுரை எழுத பலமணிநேரம் ஆகிறது. ஆனால், டுவீட்டுவது சுலபம். உடனே செய்யலாம். நொடியில் தன்நிறைவு. எப்படியெனில்,

உடுக்கை அடிப்பவன் கைபோல ஆங்கே

படக்கென் றடிப்பது டுவீட்டு

ஆனால் உஷார். வீட்டில் அலமாரியில் ஒளித்து எழுதும் அந்தரங்க டைரி இல்லை டுவீட்டர். இணையத்தில் யார் வேண்டுமானாலும் (கூகிளில் தேடி, டுவிட்டருக்கும் வந்து) என்றும் படிக்கலாம். பதிவோடை வேறு நீங்கள் டுவீட்டுவதற்கு அழியாப் புகழ் இல்லையெனினும் நிச்சயம் அழியாப் புகல் அளிக்கும். ஆகையால்,

எண்ணித் துணிக டுவீட்டு டூவிட்டியபின்

எண்ணுவம் எண்ப திழுக்கு

சரி, அறிமுகத்திற்கு பிறகு டுவிட்டரைக்கொண்டு என்ன செய்யலாம்? முன்னர் சொன்னபடி இலக்கியம் வடிக்கலாம். டுவிட்டரில் தமிழ் ரைட்டர்கள் பலர் இதை செய்வதற்காக இருக்கிறார்கள். பெரும்பாலும் writer என்று தொடங்கும் டுவிட்டர்  அடையாளத்தை வைத்திருப்பர். இவர்கள் எழுதுவதை நீங்கள் ஒரே இடத்தில் படிப்பதற்கு சுலபமாக இவர்களை ஃபாலோ செய்ய அதாவது ’தொடர’ வேண்டும். ஓரிரு க்ளிக்கில் இது முடிந்துவிடும். ஆனால் பதிலுக்கு இவர்கள் உங்களை ஃபாலோ செய்ய நீங்களும் இலக்கியம் வடிக்கவேண்டும்.

டுவிட்டரில் யாரைவேண்டுமானாலும் நீங்கள் தொடரலாம். அவர்கள் பதிலுக்குச் செய்யவேண்டும் என்பது நியதி. மரியாதையில்லை.

ஆனால் உங்களை ஃபாலோ செய்தவரை பதிலுக்கு ஃபாலோசெய்வதாக போக்குகாட்டிவிட்டு இரண்டு நாளிலோ இரண்டு நிமிடத்திலோ அன்-ஃபாலோ செய்யாதீர்கள். அது எட்டாவது பாவம். வெண்பாவாக்கினால்,

நாடாது ஃபாலோவிங் கேடில்லை டுவிட்டரில்

வீடில்லை அன்ஃபாலோ செய்பவர்க்கு

சொந்தமாக இலக்கியம் இல்லை சுவாரசியமாக எதுவும் வரவில்லை என்றால் கவலையில்லை. டுவிட்டரில் ரீட்டுவீட்டு என்று ஒரு அங்கம் இருக்கிறது. பிறர் டுவீட்டியதை, ரிப்பீட்டுவது. ஆமோதிக்கிறேன், வழிமொழிகிறேன் என்று கொசுறாக சொந்தக்கருத்துக்கள் சேர்த்து.

இப்படிச் செய்வதால் சொந்தமாக டுவீட் செய்ய மேட்டர் இன்றியே டுவிட்டரில் பலகாலம் பவனி வரலாம். மேலும் எவரின் டுவீட்டை நீர் ரீட்டுவீட் செய்தீரோ, அவரிடம் அநேகமாக நல்லபெயர் உங்களுக்கு. நாளடைவில் நீங்கள் ஏதாவது எழுதினால் உடனே அதை ரீட்டுவீட் செய்ய சிலர் முன்வருவர். அது ஏற்கனவே நீங்கள் ரீட்டுவீட் செய்ததாக இருந்தாலும். ஏனெனில் டுவிட்டரில்,

பிறர் ரீட்டுவீட்டை முற்பகல் செய்யின் தமர்

ரீட்டுவீட் தானே வரும்

இதையே நீட்டி, உங்களை வேண்டுமென்றே அன்ஃபாலோ செய்தவர்களை ஒறுத்தவும் பயன்படுத்திப்பார்க்கலாம். அதாவது, தொடர்ந்து அவரது டுவீட்டுக்களை ரீட்டுவீட், மறு ஒலிபரப்பு செய்துகொண்டே இருப்பது. ஆஹா, இப்படியாப்பட்ட டுவிட்டர் நண்பரையா நாம் இழக்க இருக்கிறோம் என்று கருதி மேற்படி டுவீப்பர் உங்களை மறுபடியும் தொடர வாய்ப்பு அதிகம். வெண்பாவில்,

அன்ஃபாலோ செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

வன்RT செய்து விடல்

ஆனால் அவர் ஃபாலோ செய்யத்தொடங்கியதும் அவரை ரீட்டுவீட் செய்வதை நிறுத்திவிடவும். இல்லை உங்கள் டுவீட்டுகள் உன்னைப்போல் மற்றொருவன் என்றாகிவிடும்.

இந்த ரீட்டுவீட்டில் சில அபாயங்களும் இருக்கிறது. பிறர் கருத்தை அதை தோற்றுவித்த பிரத்தியேக முதன்மையை அவருக்குத் தராமல், நைச்சியமாக நமதாக்கிக்கொள்வது. அதாங்க, காப்பி அடிக்கிறது. ரீட்டுவீட் செய்யாமல் வெட்டி ஒட்டுவது. இப்படி செய்வது உடனே உங்களை மேட்டர், லிங்க் தன்னிடம் சுடப்பட்டவர், அதை உங்களிடம் படிப்பவர் என்று எவரும் மன்னிக்காத சுட்டெழுத்துச்செம்மல் என்று டுவிட்டர் செலிப்ரிட்டியாக உயர்த்திவிடும்.  அதாவது,

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே

பிறர்டுவீட்டில் சுட்ட லிங்க்

இவ்வகை விஷய ஞானம் பகிர்தல், இலக்கியம் வடித்தல் எல்லாம் சரிப்படவில்லையென்றால், டுவிட்டரில் நிச்சயம் அரட்டை அடிக்கலாம். பொழுதைக்கழிக்கலாம். ஆனால் அலுவலகத்தில் செய்யவேண்டும். அப்போதுதான் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் வேலைசெய்வதாகத்தெரியும். சுருங்கச்சொன்னால்,

தேடில் காலவிரயம் டுவீட்டர் ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

ரயில் பஸ் பிரயாணங்களில் ஏற்படும் திடீர் சிநேகங்களில் ஆள் யார் என்று நேரில் பேசிப்பழக தருணம் நிகழும். தோதுபடவில்லையென்றால்  சீட்டை மாற்றிக்கொள்ளலாம். இல்லை பிரயாணம் முடியும்வரை பொறுத்திருந்து மொத்தமாக முழுக்கு போட்டுவிடலாம். இதைப்போலின்றி, டுவிட்டரில் யாருடன் அரட்டை என்பதில் கவனம் தேவை.

அசின் போல் டுவிட்டர் அடையாளம் கொண்டவர் அபத்தமாக ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார். உண்மையோ என்று உறுத்திக்கொண்டே இருக்கும். சஷி தரூர் போல் அடையாளம் உள்ளவர் தான் மூக்குசிந்துவதைப்பற்றி குறைகூறினாலும் இந்தியாவின் பாரம்பரியத்தை உருக்குலைக்க டுவிட்டரில் வெளிநாட்டு சதியோ என்றும் தோன்றும். மறுநாள் பாராளுமன்றத்தில் மன்மோஹன்சிங் விளக்கம் அளிக்கும் வரையில்.

போதாததற்கு சில வேளைகளில் அந்தரங்கங்களை அடையாளத்தை நம்பிப் பகிர்ந்தால் அலங்கோலமாகிவிடும். அட்லீஸ்ட் அறுவையாய் எவரிடமாவது மாட்டிக்கொண்டு விழி பிதுங்குவோம். ஏனெனில்,

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை டுவிட்டரில்

டகில்பாய்ந்து படுத்தி விடும்

அதற்காக ஒரேடியாக பயந்துவிடாதீர்கள்.என்போல் பல அப்பிராணி அறுவைகள் டுவிட்டரில் தமிழில் கதைத்துக்கொண்டு இருக்கிறார்கள். டுவிட்டர் உலகளாவிய சுய அடையாளம் கோறும் இணைய அநாமதேய குரல்களின் கூட்டு. இலக்கியவாதிகளுக்கு பிடிக்குமாறு சொல்லவேண்டுமென்றால், (வலைப்பூவிற்கு பின் வந்துள்ளதால்) ஒரு இணைய பின் நவீனத்துவம். நம்ம ரேஞ்சுக்கு சொல்லனும்னா, ஏதோ கருத்தடை விளம்பரம் போல் சொல்வதாகத் தோன்றினாலும், நிச்சயம் தினமும் டுவிட்டரை உபயோகித்துப்பாருங்கள். ஏனெனில்,

வலையினி திவலைப்பூவினி தென்பதமிழ் மக்கள்

டுவிட்டர்ச்சொல் கேளா தவர்

*****

[அக்டோபர் 2010: நான் டுவிட்டரில் இல்லை]