மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: நேதனூரி கிருஷ்ணமூர்த்தி கச்சேரி

Standard

நேதனூரி கிருஷ்ணமூர்த்திக்கு பின்பாட்டு அவர் சிஷ்யர்கள் மல்லாடி சகோதரர்கள், வயலினில் ஸ்ரீராம் பரசுராம், மிருதங்கம் திருச்சி சங்கரன், கஞ்சீராவில் பி.எஸ்.புருஷோத்தமன். இரண்டு என்றும் ஒளிரும் நட்சத்திரங்கள், இரண்டு ரைசிங் ஸ்டார்ஸ். அருமையான செட். கச்சேரி சிறப்படைய முதல் தேவை பூர்த்தி. மேல் ஸ்தாயிகளில் சற்று தடுமாறினாலும் கிருஷ்ணமூர்த்தியின் குரல் அவர் சொன்னதை கேட்டது. அவர் இசையை நம்மை கேட்கவைத்தது.

வனஜாக்‌ஷி என்று கல்யாணி வர்ணம் தொடக்கத்தில் இருந்து ’சுந்தரத்தெலுங்கு’ கச்சேரி அமர்க்களம். வர்ணத்திற்கு முன் குறைவாக நிறைவாக ஆலாபனை. வர்ணத்தின் சிட்டைஸ்வரங்களை ஒட்டி நி யில் முடியுமாறு கமபத பொதிந்த கல்யாணி ஜீவஸ்வரங்களை பன்ச் அடித்துக்கொண்டே வந்த ஆவர்தன ஸ்வரகல்பனை. பிரமிப்பில் வயலினில் வாங்கி வாசிக்க வேண்டிய ஸ்ரீராம் பரசுராம் சற்று திணறிவிட்டார். மேடையில் வித்வான்களிடையே ஜெனரேஷன் இடைவெளி வயதில்மட்டுமல்ல.

வர்ணத்தின் முடிவில் மின்விசிறிகள் நிறுத்தப்பட்டன. நல்லதே. அடுத்தடுத்து பார்வதிகுமாரம் பாவயே என்ற தீக்‌ஷதரின் நாடக்குறிஞ்சி ராக கீர்த்தனை, ஈபனிக்கோ ஜென்மின்சிதி தியாகராஜரின் அசாவேரி கீர்த்தனை. ஈபனிக்கோ என்று ஒருவித மெலிதான குரலில் கிருஷ்ணமூர்த்தி பாடுகையில் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் சங்கரனின் மிருதங்கம் அந்த சாஹித்திய வார்த்தயின் இசை கமகத்தையே வாசித்துவிட்டதோ என்று பிரமிப்பு.

பூர்விகல்யாணியில் முதல் விஸ்தாரமான ஆலாபனை.

சஞ்சய், கிருஷ்ணா, விஜய் சிவா, ரவிக்கிரன், சந்தானகோபாலன், சுமித்ரா, கல்யாணி கனேசன் என்று அதற்குள்ளாகவே இந்த சீசனில் கேட்ட இடங்களில் எல்லாம் பூர்விகல்யாணியையும் அதன் சுத்துபத்து ராகங்களான, கமகக்கிரியா, கமனாஸ்ரமம் என்றும் மேடையில் பொழிகிறார்கள். பல முயற்சிகளில் அனைத்துமே பூர்விகல்யாணியாய் கேட்கிறது. சில இடங்களில் பாடகர்களின் குரல்வளம் மட்டும் கேட்கிறது.

கிருஷ்ணமூர்த்தி பூர்விகல்யாணியேதான் பாடினார். அவ்வாறே கேட்டது. அருமையாய் இருந்தது.

வர்ணத்திற்கு பிறகு ஸ்ரீராம் சுதாரித்துக்கொண்டு கச்சேரி முழுவதும் உறுதுணையாய் வாசித்தார். பூர்விகல்யாணியில் பாடுவதை அப்படியே தொடருகையில் சில வேளைகளில் சத்தமாக இருந்தது. மற்றபடி நன்றாக வாசித்தார். பரலோக சாதனமே மனஸா கீர்த்தனையின் முடிவில் ஸரிகா என்று முடியும் ஸ்வரங்கள் கார்வைகள் கமகங்களுடன் பரளாக வந்து குறைப்பில் முடிந்தது. சிஷ்யர்களுடன் ஆலோசனைக்கு(?) பிறகு நடுபைபலிகேரு என்று மத்தியமாவதி கீர்த்தனை பாடினார். ஆஜானுபாஹுயுக ஸ்ரீஜானகி பதி என்ற சாஹித்திய வார்த்தைகளில் நிரவல் சுருக்கவே முடிந்தது.

மெயின் ராகம் யதுகுலகாம்போஜி. விஸ்தாரமாக ஆலாபனை செய்தார். சில பகுதிகளை கீழே வீடியோ க்ளிப்பில் கேளுங்களேன்.

[டிஸ்க்ளெய்மர்: இந்த வீடியோக்கள் நிச்சயம் விநியோகத்திற்கும், விற்று நான் பணக்காரனாவதற்கும் இல்லை. என்னை இணையத்தில் படிக்கும் அன்பர்களில் சிலர் (3 பேர்?) கர்நாடக இசையை வந்து கேட்குமாறு செய்வதற்கு மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன். இசையை வழங்கியவர்கள் என்னை பொறுப்பர். மியூசிக் அகடெமி ஆர்கனைசர்களும் பொறுத்தருள்வர் என்று நம்புகிறேன்.]

வீடியோ சுட்டி 1

வீடியோ சுட்டி 2

யதுகுலகாம்போஜி பழமையான ராகம். ஒரு மேளகர்த்தவினுடன் ஜனக-ஜன்ய உறவு கண்டுபிடிப்பது கஷ்டம். தமிழ் இசையில் பன் செவ்வழி என்றும், எருகலகாம்போஜி என்று பழங்குடியினர் பாடிய ராகம் என்றும் பெயராம். விஷயம் தெரிந்த எஸ்.ஆர்.ஜானகிராமன் கூறியுள்ளார் (நான் கூரியர் சர்விஸ்). ஸரிமாம – கமபாப – தநிஸாரிநிஸாநித – ஸதபமகஸ – ரிகமக – ரிகமகஸா இப்படி ரம்மியமான நிதானமாக பாடப்படவேண்டிய பிரயோகங்களை இந்த ராகத்தை காம்போஜியில் இருந்து ஓரளவு வேறுபடுத்திக் காட்டிவிடும். விசேஷமாக வெவ்வேறு இடங்களில் மூன்று வகையில் மத்தியமம் கேட்கும். உதாரணமாக, ஸரிமாம என்கையில் ம மிருதுவாக ஒலிக்கும். கமபாப வில் சாதாரணமாக (மிருதுவுக்கும் அதிகமாக, தட்டையாக) ஒலிக்கும். ஸதபாமகஸ வில் இந்த இரண்டிலிருந்தும் வேறாக (வார்த்தையில் எனக்கு சொல்ல வரவில்லை).

யதுகுலகாம்போஜியைபற்றி கச்சேரி சர்க்கிளில் ஒரு ஸிக் ஜோக்கும் உண்டு. வித்வான் காரியரை தொடங்குகையில் காம்போஜியாக குரலில் வருவது, பிற்காலத்தில் குரல் தேய்ந்து (காம்போஜியாக பாட எத்தனிக்கையிலும்) யதுகுலகாம்போஜியாக கேட்கும் என்று.

அதிகாதுபஜமானஸ என்ற கீர்த்தனையை ஆதி தாளத்தில் கிருஷ்ணமூர்த்தி அமைதியாக பாடினார். இந்த ராகத்தில் ஸ்வரபிரஸ்தாரங்கள் கம்மியாகவே செய்வர். கிருஷ்ணமூர்த்தி நிறையவே செய்தார், நன்றாகவும் செய்தார். முடிவில் தனி ஆவர்த்தனமும் விட்டார்.

சபாஷ் என்றால் கேட்டுவிட்டு நன்றாக இருப்பதற்காக பாராட்டு என்று கொள்ளலாம். கச்சேரியில் ரசிகராய் நாமும் செய்வோம். பாடகராய் இருந்தால், நாம் பாடிய ஒரு ஸ்வரக் கோர்வையை வயலின் அக்‌ஷரம் பிசகாமல் மறுபடியும் வாசித்தால் செய்வோம். ஆஹா என்றால் சபாஷிற்கு சற்று மேலே. பாராட்டு நம் கேள்வி ரசனையால் மட்டுமின்றி, நமக்கு வேறு ஏதொ செய்ததற்கும். ரசிகராய் மனதை இண்டெலிஜென்ஸை தாண்டி பிசைகையில் சொல்லுவோம். பாடகராக இருந்தால், அனுசுரணையாய் வாசிக்கும் பக்கவாத்தியக்காரர்கள் நம் கற்பனையையும், பாட்டையும் தங்கள் வாசிப்பினால் மேம்படுத்துகையில் (பாடிக்கொண்டே, அப்படித் திரும்பி, தலையை ஆட்டிக்கொண்டே) சொல்லுவோம். கவனித்திருக்கலாம்.

கச்சேரியில் பல கீர்த்தனைகளில், பல இடங்களில் கிருஷ்ணமூர்த்தி, சங்கரனின் மிருதங்கத்தை ஆஹா என்றார்.

அன்று விஜய்சிவா கச்சேரியில் கடத்தில் சுரேஷ். இன்று கஞ்சீராவில் புருஷோத்தமன். சங்கரனுக்கு சரியாக ஈடு கொடுத்தனர். கஞ்சீராவின் கும்கியும் மிருதங்கத்தில் தொப்பியும் சேர்ந்து செம்மையான மியூசிக் அகடெமி சவுண்ட் சிஸ்டத்தில் அபாரம். தனியின் நடுவில் கரெண்ட் கட். இசைக்கு ஒரு உபத்திரவமும் ஏற்படுத்தவில்லை. மியூசிக் அகடெமி ஆர்கனைசர்களுக்கு இதற்கும் ஒரு ஷொட்டு. தனியின் ஒரு (முடிவுப்) பகுதி வீடியோ க்ளிப்பிங்காக கீழே கொடுத்துள்ளேன்.

வீடியோ சுட்டி 3

கிரிக்கெட் மாட்சில் சூடான தருணத்தில் திடீரென்று ஃபிளாஷெர்ஸ் கிரவுண்டினுள் பிட்ச் வரை ஓடி தொட்டுவிட்டு போலீஸிடம் கோழிபோல அமுங்குவரே. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், தனியின் முடிவில் ஆர்கனைசர் முரளி போன்றோர் உட்காருங்கோ என்று தடுத்தும் கேளாமல், சடாரென்று கூட்டத்தில் ஒரு வெள்ளிமுடி ரசிகர் எழுந்து மேடையில் இருப்பவர்களை நோக்கி மே யூ லிவ் ஃபார் 99 யியர்ஸ் என்று (ஏன் 99? 100னா கூடாதா?) குட்டி சொற்பொயிவு (ஆத்து ஆத்துனு) ஆத்தினார். என் பக்கத்தில் மாமி அத ஏன் சாபம் கொடுக்கறமாதிரி இங்கிலீஷ்ல துப்பரார்?

கச்சேரியின் முடிவில் நேதனூரி கிருஷ்ணமூர்த்தி அவரது அகடெமி கச்சேரியின் வயது 55 என்று நெகிழ்ந்து ரசிகர்களுக்கு நன்றி கூறினார். ஷதாபிஷேகத்தை தொட்டிருப்பார் (என்று நினைக்கிறேன்); இன்றும் வயதில்லாத இசையை பொழிவதற்கு ரசிகர்களாகிய நாங்களல்லவா கூறவேண்டும் நன்றியை.

[நேதனூரி கிருஷ்ணமூர்த்தி டிசெம்பர் 22, 2009 அன்று மியூசிக் அகடெமியில் செய்த கச்சேரியில் என் எண்ணங்கள்]