மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: பரசாலா பொன்னம்மாள் கச்சேரி

Standard

இங்கு மாஸ் கன்சர்வேஷன் விதி வேலைசெய்யாதோ, இது மியூசிக் அகடமியில் நுழைகையில் அடிக்கடி வரும் சந்தேகம். வெளியே நிற்கும் கார்களைக்காட்டிலும் உள்ளே மக்கள் குறைவு. வித்வான் முக்கியமான மதுரங்களை நாம் சபையில் இல்லாதிருக்கையில் பாடிவிடுவாரோ என்று பதபதைத்து கான்டீனில் இட்லி-வடையை வேகமாக விழுங்குகையில் பொன்னம்மாள் கச்சேரியை தொடங்கிவிட்டார்.

ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் நேரடி சிஷ்யையான பொன்னம்மாளின் சங்கீதம் நாம் இழந்துவிட்ட ஒரு உல்லாசமான, மெதுவான நாட்களடங்கிய கடந்தகாலத்தை நினைவூட்டும். வித்தியாசம், புதுமை என்று தியாகராஜருக்கு பேஸ்பால் தொப்பி அணிவிக்கும் இந்நாளிலும் மீண்டும் ஒரு முறை அவரை பாட அழைத்ததற்கு மியூசிக் அகடெமியை பாராட்டவேண்டும்.

இவ்வகை வின்டேஜ் வித்வான்கள் கச்சேரிகளில் நீங்கள் முதலில் கவனிப்பது எப்படி பிரவாகமாக ஆனால் லகுவாக சம்பிரதாயத்திலிருந்து விழுவாத இசை கொட்டுவதை. அடுத்து கவனிப்பது, சாவேரியோ, சங்கராபரணமோ, தீக்‌ஷதரின் சாமரமோ, எந்த ராகம் எடுத்தாலும், அதை மேடையில் தேடாமல் விவரிக்கமுடிகிற திறன். பிறகு மும்மூர்த்திகள் முதல் தமிழ் தியாகைய்யர் வரை (கற்பகமே பாடலாமோனோ என்று கேட்டுவிட்டு சுறுசுறு என்று விரட்டியது), பல தாளங்களில் அவர்களிடமிருந்து வெளிப்படும் கீர்த்தனை களஞ்சியம்.

அந்த நிர்மலமான நிதானமான இசை வெளிப்பாட்டில் எப்போதும் கீர்த்தனையின் பல்லவியை மொத்தமும் நிறுத்தாமல் பாடுவதற்கு (என்பது வயதைத் தாண்டிய) பாடகரிடம் மூச்சு அவகாசம் இருக்கிறது. அநேக கீர்த்தனைகளுக்கு ராகம் ஆலாபனை செய்யும் செம்மையும், திறமையும் இருக்கிறது. அன்று எடுத்துக்கொண்ட பட்டியலை மொத்தமும் பாடிவிட்டு, இன்னமும் பாடுவதற்கு அவகாசம் இருக்கிறது. வெளியே வெராண்டாவில் எலக்ட்ரானிக் சுருதிபெட்டி விற்கும் கடைகளில் வாளாய் அளவளாவிக்கொண்டிருக்கும் ரசிகர்களையும் மதிப்பளித்து வந்து அமர்வதற்கு சபையினுள் காலி இருக்கைகளும் இருக்கிறது.

சாவேரி ராகம் விரிவாக பாடப்பட்டது. சியாமா சாஸ்திரியின் துருசுகா கீர்த்தனை. பிறகு வந்த ஸ்வரபிரஸ்தாரங்களில் இருந்து சிறு பகுதி கீழே வீடியோவாக கொடுத்துள்ளேன்.

[டிஸ்க்ளெய்மர்: இந்த வீடியோக்களை எடுப்பதை மியூசிக் அகதெமியில் அவர்கள் விரும்பவில்லை. செக்கியூரிட்டி மூலம் அறிந்து கொண்டேன். அதனால் இப்போதே கூறிவிடுகிறேன். இவை விநியோகத்திற்கு இல்லை. நிச்சயம் விற்று பணம் பண்ணுவதற்கும் இல்லை. தமிழ் ஆங்கிலம் என்று, என்னை இணையத்தில் படிக்கும் அன்பர்களில் சிலர் கர்நாடக இசையை வந்து கேட்குமாறு செய்வதற்கு மட்டுமே இங்கு கொடுத்துள்ளேன். பொன்னம்மாள் என்னை பொறுப்பார். அகடெமி ஆர்கனைசர்களும் பொறுத்தருள்வர் என்று நம்புகிறேன்.]


Video Link 2

பிறகு செய்த சங்கராபரணம் ஆலாபனை அமைதியான, நிதானமான விஸ்தரிப்பு. மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம். கர்நாடக இசையின் மூச்சுமுட்டும் விஸ்தாரங்களையும், கண்கள் விரியும் நுணுக்கங்களையும் புரிகிறமாதிரி அறிவையாவது நாம் பெற்றிருக்கமுடியவில்லையே. எந்துகு பேதலவெல புத்தீயவு என்று தியாகைய்யர் கேட்பது எனக்கும் பொருந்துகிறது.

கச்சேரியின் பின் பகுதியில் சானந்தம் என்று சதுர்ராகமாலிகையாக சுவாதித்திருநாள் இயற்றியதை பாடினார். கமலமனோஹரி, ஹம்ஸத்வனி, ரேவகுப்தி, தரங்கினி என்று நான்க்கு ராகங்கள். கச்சேரியின் மற்ற கீர்த்தனை பட்டியலும் கீழே கொடுத்துள்ளேன்.

பக்கவாத்தியக்காரர்களை குறிப்பிட்டே ஆகவேண்டும். வயலினில் மஹாதேவ சர்மா, மிருதங்கத்தில் சலுவராஜு, கடத்தில் எர்ணாக்குளம் சுப்பிரமண்யன். உடன் வாசிப்பவர்களையும் வாசிக்க விட்டு தானும் நன்று வாசிக்கும் மனவிலாஸத்துடனும், பாடகரை மறைத்து வாத்தியங்களை அடிக்காமல், சுநாதத்துடனும் வாசிக்கும் இவ்வகை பக்கவாத்தியகாரர்கள் ஏன் சீசனில் அரிதாகி வருகின்றனர். இவர்களைப்போன்றோர் சென்னைவாசிகள் இல்லை என்பதால் இருக்குமோ.

வெளியே காருக்கு மிதந்து வருகையில் மனதில் நம்பிக்கை. நிச்சயம் இவ்வகை இசை என்றும் இருக்கும், அடுத்த வருடம் இல்லாவிடினும்.

*****

கச்சேரி பட்டியல்

[பரசாலா பொன்னம்மாள் டிசெம்பர் 20 2009 அன்று மியூசிக் அகடெமியில் செய்த கச்சேரியில் என் எண்ணங்கள்]