மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: விஜய் சிவா கச்சேரி

Standard

விஜய் சிவா ராஹுல் டிராவிட் போல. மிஸ்டர் ரிளையபிள். என்று கேட்டாலும் கன்சிஸ்டென்ட்டாக ஒரு தரத்திற்கு மேல் கச்சேரி செய்வார். டோட்டல் பெயிலியர் என்று என்றும் கிடையாது. பாஸ் மார்க்கிற்கு மேல் எவ்வளவு என்பது அன்றைய தினத்தை பொறுத்தது.

சில பரிட்சைகளை எழுதுகையில் முதல் நாலைந்து கேள்விக்கு பதில் சட்டென்று கிடைத்து நொக்கிவிடுவோம். நிச்சயம் சென்டம்தான் என்று தலையை சிலுப்பிக்கொள்கையில், கடைசி இரண்டு மூன்று கேள்விகள் விடை தெரியாமல் தேங்கிவிடும். என்ன கர்ணம் போட்டாலும் சற்றென்று பதில் பிடிபடாது. மியூசிக் அகெதிமியில் அன்று நடந்தததில், கேதாரம், ஆனந்தபைரவி, கமனாஸ்ரமம், பைரவி என்று 60% கச்சேரி விஜய் சிவாவுடையது. சங்கரன்-சுரேஷ் தனி ஆவர்த்தனத்திற்கு பிறகு நாட்டைகுறிஞ்சி ராகம் தானம் பல்லவியில், ராகம் சரியாக பிடிபடாமல் கச்சேரி சுடு குறைந்தது. தனிவரை இருந்த கச்சேரி விறுவிறுப்பு அப்புறம் இல்லை.

ஆர்.கே. ஸ்ரீராம்குமார் வயலினில் விஜய்சிவாவின் குரு அதே டி.கே. ஜெயராமனிடத்தில் பயின்றவர். சிவா கச்சேரியில் என்றும்போல் அன்றும் வயலினில் உடன்பாடிக்கொண்டே வந்தார்.

ஆனந்தபைரவியில் சியாமா சாஸ்த்ரியின் பாஹி ஸ்ரீ கிரிஜா, பைரவியில் தியாகராஜரின் ரக்‌ஷபெட்டரே, சாவேரியில் பட்ணம் சுப்ரமண்யரின் எடுநம்மினவோ என்று எப்போதும் போல் வியஜ்சிவாவின் கீர்தனை ரெபார்டுவா அபாரம். மூன்று (ஆ.பைரவி, கமனாஸ்ரமம், பைரவி) நிரவல் செய்தார். என்னைப் பொறுத்த வரை மூன்றும் சுமார்தான்.

எனக்கு பிடித்தது அன்று சிவா பாடிய கமனாஸ்ரமம். இது கோவிந்தாசாரியார் தன் சங்ரஹசூடாமணியில் (1750 – 1800) ராகங்களின் பீரியாடிக் டேபிளை அப்டேட் செய்த பிறகு வந்த பிற்கால ராகம். அந்தகாலகட்டத்திற்கும் தொன்மையான புழக்கத்தில் இருந்திருக்கக்கூடிய கமகக்கிரியா ராகத்தில் இருந்து பிரிந்து, கிரமப்படி மேளகர்த்தாவாகியது என்று எஸ்.ஆர்.ஜனகிராமன் தன் ராக லக்‌ஷணங்கள் (பாகம் 3, பக்கம் 10) உரையில் குறிப்பிடுகிறார். மேளராக ஜனக-ஜன்ய லாஜிக்படி இன்று கமனாஸ்ரமத்தின் ஜன்ய (குழந்தை) ராகமாக பூர்விகல்யாணியை (அல்லது கமக்கிரியாவை – இரண்டும் ஒன்றல்ல ஒன்றுதான் என்ற சர்சையை இங்கு தவிர்ப்போம்) சொல்கிறோம்.

ஜானகிராமன் சார் மும்மூர்திகளின் காலத்திற்கு பிறகு வெகுவாக பிராகசிக்கத் தொடங்கிய ராகம் என்கிறார். நான் இதுவரை கமனாஸ்ரமத்தில் சேஷகோபாலன் பாடி ஒரு பஜனும், பாலமுரளிகிருஷ்ணா பாடி ஒரு பல்லவியும் (காஸெட்டில்தான்) கேட்டிருக்கிறேன். முன்நூறு வயது நிரம்பிய நண்பர், முன்னொரு காலத்தில் எம்.எல்.வி. மியூசிக் அகதெமியில் பாடியதை கேட்டிருக்கிறேன் என்கிறார்.

இதி நீகு ந்யாயமா என்ற மைசுர் வாசுதேவாச்சார் மிஸ்ர சாப்பு தாளத்தில் இயற்றிய கீர்த்தனையை அன்று விஜய்சிவா பாடினார். கமனாஸ்ரமத்தை சிரமமின்றி பாடினார் என்று தோன்றுகிறது. ஸ்வரங்கள் ஜிகுஜிகு என்று வந்தது. மபதா,, பமகா,,, என்று நிறுத்திய பிரயோகங்கள் ராகத்தை வித்தியாசப்படுத்தியது (பூர்விகல்யாணியில் இவ்வாறு நிறுத்தமாட்டோம்).

பைரவியில் ஸ்வரங்கள் சற்று தயங்கி, பின் ஓடையாக வந்தது. நடைகளை மாற்றி சிறு ஸ்வரக்கோர்வைகளை பின்னியது மிருதங்கம் வாசித்த சங்கரனையும் புருவத்தையும் உயர்த்தியது. கேட்பதற்கும் நன்றாக இருந்தது. ஆனால், பெரிய க்ளைமாக்ஸ் தீர்மானம் இன்றி முடிவுற்றது. சங்கரன்-சுரேஷ் கோம்போவிற்கு ஹோம்-ரன். முடிவு, பின்னர் வந்த தனி என்று வெளுத்துவிட்டனர்.

ஆர்டிபி நாட்டைகுறிஞ்சியில். தானம் ஆரம்பம் நன்று. ராகம் ஆலாபனை அவ்வளவு உயர்ச்சியாக இல்லை.கண்ட-திரிபுடையில், பல்லவி சத்யானந்த சானந்தா நித்யானந்த கோவிந்தா. ராகத்தை விவரித்து பாடுவதற்கு அவ்வளவு சவுகரியமாக இல்லையோ என்று தோன்றியது. ஆனால் ராகமாலிகையில் மாண்டு ராகம் அருமை.

மொத்தத்தில் இன்னொரு விஜய்சிவா ஸ்டாண்டர்ட் விஜய்சிவா கச்சேரி.

உள்ளூர் மிருதங்க வித்வான்களிடம் சட்டென்று தென்படாத மனவிலாஸம் அயல்நாட்டில் பலவருடம் தங்கிவிட்ட புரஃபசர். சங்கரனிடத்தில் கச்சேரி முழுவதும் பட்டவர்த்தனம். கீர்த்தனைகளில் சரணங்களை உபபக்கவாத்தியம் (கடம் சுரேஷ்) தான் தொடங்கினார். வயலின் வாசிக்கையில் கடம்தான் பக்கம். இரண்டு பேர் கைதட்டிவிட்டார்களே என்று தனியில் கடத்தின் மொஹராவில் மிருதங்கம் குறுக்கே புகுந்து பிடுங்கவில்லை. தன் முறை வருகையில் அடித்து வாசித்து கைதட்டலை அதட்டவில்லை. வாசிப்போ உன்னதம். ரக்‌ஷபெட்டரேயில் திடுதாங்கு திடுதாங்கு என்று நுழைந்த விதம் ஒருவித கம்பீரம் கலந்த சுநாதம். பாடகர் கீர்த்தனை சங்கதிகளை விவரிக்கையில் இவர் தன் பங்கிற்கு சங்கதிகளை மிருதங்கத்தில் கோர்த்துகொண்டெ சென்றார். தனியில் இரண்டாவது ரவுண்டில் மறக்காமல் திஸ்ரம், கண்டம், மிஸ்ரம் செய்தார் (சங்கீர்னத்தை ரேவதிகிருஷ்ணாவின் முன் வீணைகச்சேரியில் பிரபஞ்சம் ரவீந்திரன் செய்தார்). கடத்தில் சுரேஷ் சரியாக ஈடுகொடுத்தார். தன்னிச்சையாய் ரசிகர்களிடமிருந்து அப்ளாஸ்.

திருச்சி சங்கரன், சுரேஷ் தனி ஆவர்த்தனத்திற்கும் எழுந்து செல்லும் பிரகிருதிக்களுக்கு ஆத்திரத்துடன் ரைம் செய்யும் விஷயத்தை அடக்க முடியாதது போன்ற ஏதோ நிர்ப்பந்தம் இருக்கவேண்டும். தெரிந்தே பாவம் செய்வார்களா என்ன?

[விஜய்சிவா டிசெம்பர் 16, 2009 மியூசிக் அகெதமியில் செய்த கச்சேரியில் என் எண்ணங்கள்]