நல்லதை பல தடவை சொல்லலாம். இணையத்தில் அநேகமாக தங்காது. நல்லதல்லாதவற்றை சொல்லாமல் விட்டுச்செல்வது உத்தமம். சொன்னாலும் சுருக்கமாக சொல்லி தாண்டிச்செல்வது மத்தியமம். இப்படி செய்தாலும், அதையே ஞாபகம் வைத்துக்கொண்டு நீ அன்று அப்படி குறை சொன்னியே என்று நினைவூட்டிக்கொண்டிருப்பது அதமம். இணையத்தின் சாசுவதத்தில் அதமம் கோலோச்சியிருக்கிறது என்றாலும், நம்பிக்கை வைத்து மீண்டும் ஒருமுறை நல்லதை மட்டும் சொல்லுவோம். மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரியைப் பற்றி, சுருக்கமாக.
வசுந்த்ரா ராஜகோபால் கச்சேரியில் நுழைகையில் சிலதை உத்திரவாதமாக கொள்ளலாம். பூமிங் என்றும் மெல்லிஃப்லூயஸ் என்றும் இல்லாத, பிசிறு தட்டாத கரகர-பிரியா விடுத்த கணீர் குரல்; ஆழ்வாரின் கிளரொளி இளமையொத்த தற்கால கச்சேரி மூட்டைகளில் விடுபட்டுப்போன கர்நாடக சங்கீதத்திற்கு இன்றியமையாத ராகங்கள்; மொழி, இயற்றியவர், தாளம் என பல்வாரியாக கீர்த்தனைகளில் பல்சுவை சம விநியோகம், நிறுத்தி நிதானமான பாடும் முறை, தேவைக்கேற்ற ஸ்வரப்பிரஸ்தாரம், லயவிந்நியாசம், வித்வத் விலாஸம். அனைத்திற்கும் முத்தாய்ப்பாக குரலிலிருந்து பாட்டுநோட்டை புரட்டும் செயல்வரை கச்சேரியின் அனைத்து அம்சங்களையும் பகட்டின்றி, பதட்டமின்றி நாசூக்காக ஒருங்கிணைக்கும் அவரின் பாங்கு. எலிகன்ஸ் பெர்சானிஃபைட்.
பந்துவராளி (சாமி நின்னே வர்ணம்), ஸஹானா, வாசஸ்பதி, சுத்ததன்யாசி (ஹிமகிரி தனையே), ஜனரஞ்சனி, குந்தலவராளி (அந்தர்யாமி), சாவேரி… ரக்தி, பக்தி, கணம், ஜனம் என்று கர்நாடக கச்சேரி பரம்பரை ஜல்லியடிப்பு விடுத்த அதேசமயம் மொத்தமாக புரியாதவையும் அற்ற எக்லக்டிக் ராக செலக்ஷனே எனக்கு பிடித்திருந்தது. இதில் வாசஸ்பதி, ஜனரஞ்சனி மற்றும் சாவேரி விஸ்தார ஆலாபனை ஸ்வரப்பிரஸ்தாரத்துடன். இரண்டு நிரவல். நிதானம். நிறைவு.
முதலிலேயே சாமார்த்தியமாய் சஹானாவில் ஸ்ரீ வாதபி கணபதியே என்ற சிவனின் கீர்த்தனையை பாடிவிட்டார். ஸ்வரங்களை பத்மா ஷங்கர் வயலினில் நன்றாக தொடர்ந்தார். மிருதங்கம் இன்னமும் சற்று ரொப்பியிருக்கலாமோ என்று பட்டது. கச்சேரி தொடக்கந்தானே; விட்டுப்பிடுப்பொம் என்றும் இருக்கலாம்.
வாசஸ்பதியில் என்னாடி நீ க்ரிப கல்குணா மற்றும் சாவேரி ராகம் இரண்டையும் இவர் பாடி சென்றவருடமே கேட்டு மகிழ்ந்துவிட்டேன். ஸ்டண்ட், கிம்மிக்ஸ் இல்லாத வாசஸ்பதி ஆலாபனை மீண்டும் கேட்டதில் பரம திருப்தி. இந்த சீசனுக்கு அநேகமாக இந்த ராக ஆலாபனை இங்கோடு முடிந்தது என்று நினைக்கிறேன்.
ஆனாலும் இந்த கச்சேரியில் என் பெஸ்ட் ஜனரஞ்சனி.
ஜனரஞ்சனி சிலருக்கு லைட் ராகம். ஆனால் இடக்கு ராகமும் கூட. பூர்ணசந்திரிகாவுடன் நிறைய பொது அம்சங்களும் சில வித்தியாசங்களும் கொண்டது. நாட்டம் உள்ளவர்க்கு, இங்கு தனியாக விவரித்துளேன். ராம்நாட் கிருஷ்ணன் போன்றோர் இரண்டு ராகங்களையும் அனு அனு வாக ரசித்து, மனதில் சிலிர்ப்பு கண்ணில் நீர் நமக்கு வர, விஸ்தரித்து அனுபவித்துள்ளனர். வசுந்த்ரா நன்னு புரோவ ராதா என்ற சியாமா சாஸ்திரி இயற்றிய (என்று அவதானிக்கப்படும்) கிருதியை அருமையாக பாடினார். ஸ்வரகல்பனையில் ரிகமரிஸ வந்தது… ஜனரஞ்சனியாய்.
சாவேரி ராகம் மெயின். அமைதியாக நிதானமாக விஸ்தரிப்பு. போன வருடம் மியூசிக் அகெதிமியில் இவர் பாடியே கேட்டும், இன்றும் இனித்தது. அன்று ஆர்டிபி. இன்று இதில் ராமபானத்ரான என்று தியாகராஜர் ராமரின் வீரத்தை விவரிக்கமுற்படும் கீர்த்தனை. சங்கதிகளை வழுக்கி, பூசி, செல்லாமல், ஸ்வரங்கள் தனியே கேட்கும்படியாய் பன்ச் அடித்து அதே சமயம் கோர்வையாய் பாடியது கேட்பதற்கு நிறைவாய் இருந்தது.
சௌர்யம் எமனி பொகடுதுரா என்ற அதீத எடுப்பில் நிரவல் வசுந்த்ராவின் – குரு டி.ஆர்.சுமிரமனியனிடத்தில் கற்ற – லய ஆளுமையை வெளிப்படுத்தியது. மன்னார்கோயில் பாலஜியின் மிருதங்கமும் ராஜாராமனின் கடமும் அதீத எடுப்பில் அருமையாக தனி-செட் வாசித்தது.
முன்னர் எழுதியிருந்ததுதான். மீண்டும்: கற்பனை திறன் வெளிப்பாடு என்று நெட்ருபோட்ட பஞ்சரத்ன ஸ்வரகோர்வைகளை வைத்து ஒப்பேற்றுவது, கற்பனை ஓடாவிட்டால் மேல்ஸ்தாயியில் சுருதி சேர்த்து சற்று நேரம் நின்றுவிட்டு கைத்தட்டல் எதிர்பார்ப்பது (நிச்சயம் கிடைக்கும்), தமிழில் பாடுகிறேன் என்று (லாப்டாப்பில்) எழுதிவைத்து கச்சேரியில் படிப்பது, தொட்டதிற்கெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையை தூக்கி மோதிரம் மூடிய விரல்களை பல கோணங்களில் ரசிகர்களிடம் காட்டி இசை கச்சேரியில் அபிநயம் பிடிப்பது, விறுவிறுப்பு, சுறுசுறுப்பு, என்கிற சாக்கில் தன் காதை தன் கையால் மூடிக்கொண்டு தொண்டை கிழிய கதறுவது (ரசிகர் காதை யார் மூடுவது?) போன்ற கச்சேரி வன்முறைகளை வசுந்த்ரா செய்வதில்லை.
மேம்போக்கு கூட்டம் கரகோஷிக்க, நிச்சயம் பாப்புலர் ஆகமாட்டார்.
இவர் போன்ற பாட்டுக்களிலாவது கர்நாடக இசை சற்று பயமின்றி உலவட்டுமே.
***
[வசுந்த்ரா ராஜகோபால் மைலாப்பூர் ஃபைனார்ட்ஸ் சபாவில் நடத்திய கச்சேரியின் என் எண்ணங்கள்]
[ஹிந்து நாளிதழின் இந்த கச்சேரியின் விமர்சனம் – ராமகிருஷ்ணன் என்பவரால், ஆங்கிலத்தில்]