மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: சஞ்சய் சுப்பிரமண்யன் கச்சேரி

Standard

நல்ல கூட்டம். முன்னரே சென்று டிக்கெட் வங்கி, கியூவில் காத்திருந்து, அன்ரிஸர்வ்டில் துண்டு போடாத குறையாய் உள்ளே சென்று அமர்ந்து, அப்படி இப்படி திரும்பி பின்னால் சிலோன் மாமி திருநெல்வேலினா அல்வா குடுப்பீங்களா என்று பக்கத்து மாமாவிடம் கதைப்பதை கேட்பதற்குள், நேரத்திற்கு கச்சேரியை தொடங்கிவிட்டார் சஞ்சய் சுப்பிரமண்யன்.

நிறைய கேட்டுவிட்டோமே என்று, சஞ்சையை வேண்டுமென்றே சரியாய் ஒரு வருடம் கழித்து கேட்கிறேன். ஹிந்தோளவஸந்தம், கேதாரம், மணிரங்கு, பூர்விகல்யாணி, தோடி (மெயின் இல்லை), நாட்டைக்குறிஞ்சி… ராக செலக்‌ஷன், வந்தே மாதரம் என்போம் (கேதாரத்தில்), யார் போய் சொல்வார் (தோடி) ஸ்பஷ்டமான உச்சரிப்புடன் தமிழ் பாடல்கள், சஞ்சயிடம் எப்போதும்போல் வித்தியாசமான, சுவைக்கும் கலவை.

ஆனால் ஆயாசம் தெரிகிறது. வருடமொத்தமும் உலகளவில் சுழன்று செய்யும் கச்சேரி நிர்பந்தங்களில் சிக்கி தேய்வழக்காகிவிடுவாரோ என்று மனதை தடுமாறவைக்கிறது. என்னைப்பொறுத்தவரையில் மணிரங்குவைத்தை தவிர எதுவும் ஒட்டவில்லை (நாட்டைக்குறிஞ்சி நான் கேட்கவில்லை, கீழே பார்க்க).

பூர்விகல்யாணி (மெயின்) ஆலாபனையை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் இரண்டு மூன்று நிமிடங்களுக்குப்பிறகு வந்ததெல்லாம் கர்நாடக சங்கீதத்திற்கு நேர விரயம். குறிப்பாக, வாயை மூடிக்கொண்டு, குரல் போன வித்வான் சிலர் தொண்டையில் இருந்து ஹம்செய்தே மொத்த ஆலாபனையையும் செய்வது போல பூர்விகல்யாணி ஆலாபனையில் இவரும் செய்தது எனக்கு ஒப்பவில்லை. இதற்கு தருணத்தில் கைதட்டல் வேறு.

இதே சஞ்சய் முன்னர் மணிரங்குவின் நுணுக்கமான பிடிகளை அனாயாசமாய் வெளிக்கொணர்ந்து ராகம் பாடுகையில், ஸ்ரீராகம்தான் என்று இன்னமும் சத்தியம் செய்து கொண்டிருக்கிறோம். கலைஞரின் உன்னதத்தை போஷித்து அதில் ரசிகர்களாய் வளரவேண்டிய நாம் பாவ்லோவின் நாயைப்போல் ஸ்டாண்டர்டாய் மணி அடித்ததும், கலைஞர் கற்பனைதேங்கி மூச்சுபிடிப்பதற்கும், தாளத்திற்கு வருகிறதோ என்றில்லாமல் செய்யும் ஸ்வரக்கோர்வைக்கும், இன்னபிற கிம்மிக்ஸுகளுக்கும் கைதட்டிக்கொண்டிருந்தால், கலையில் மிஞ்சி இருப்பது அரங்கமும், அன்று கிழிந்த டிக்கெட்டுகளும், கைதட்டலும் மட்டுமே.

பூர்விகல்யாணியில் கீர்த்தனை பரமபாவன ராமா, பாப விமோசனா.

நிரவலுக்கு முன் சிட்டைஸ்வரத்தில் முடிக்கையில் சற்று சுருதி விலகல். வெள்ளி விழுந்தது. பிறகு கனகாம்பரதர என்று தொடங்கி நிரவல். காலப்பிரமாணத்தை உயர்த்தி, லயத்தை காட்டுகிறேன் என்று தொடையை தட்டி ’கனகாம்பரதர’ வை கனக் ஆ…ம் அ…ப அ…ர அ…த அ…ர என்று உடைப்பது அ…அய் அ…யோ என்று சஞ்சய்க்கு தெரியாததா.

ஆதி தாளத்தில் ஸ்வரங்களில் கதியை நடையை மாற்றி லய ஆலயம் செய்வது நல்ல முயற்சி. என்ன, இதை ஜிண்டாமிர்தம் செய்த சேஷகோபாலன் போன்றோரை சமீபம்வரை கேட்டபிறகு சஞ்சய் செய்வது பேல் இமிடேஷன் போல் தோன்றுகிறது. ஆனால், சஞ்சயின் தாளம் குறைகாணமுடியாத டபுள்ஸ்ட்ராங் கெட்டி. ஸ்வரங்களைத்தான் ஏகமாய் அதட்டுகிறார். தன்னைத்தானே ஜெயித்துக்கொள்ள வித்தியாசமாய் செய்தே தீரவேண்டும் என்று பிரவாளமாய் வந்துகொண்டிருக்கும் கற்பனையை புரட்டிப்போட்டு வரிக்கு வரி திடீர் என்று ஸ்தாயி ஏற்றி கத்துகிறார். உடனே சர்அடித்து மந்தரஸ்தாயியில் மைக்ரொடோன்களை சேர்த்து ரகசியம் பேசுகிறார். இரண்டுமே பூர்விகல்யாணி ராக ஸ்வரங்கள் கொண்டதுதான். மனதில்தான் ஒட்டவில்லை.

ஸ்தம்பான் அரோஹதா நிபபாதபூமௌ (சீதையை கண்ட ஆஞ்சநேயர்ஸ் ரியாக்‌ஷன்) என்பதுபோல நொடிக்கு நொடி ஸ்தாயி தாவி ஆலாபனை செய்வது, ஸ்வரம் போடுவது ஒரு எக்ஸ்பிரிமெண்டுக்கு மருந்தாய் செய்தால் நன்றாக இருக்கும். பலமுறை செய்தால் ராகத்தின் கேட்கும் சௌக்கியம் பாமர ரசிகனுக்கு நிச்சயம் குலைகிறது. மொத்தமாக புரியாத ரசிகனுக்கோ, வியர்த்து விறுவிறுக்க குதித்து பாடுகிறாரே, நன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. கோரஸுடன் சேர்ந்து குண்ஸாய் கைதட்டுகிறார்.

போய்யா உனக்கு அவ்வளவுதான் ஞானம் என்பர் வித்வத் நிரம்பிய சஞ்சய் ரசிகர்கள். நானும் சஞ்சய் ரசிகன்தான்…

கர்நாடக சங்கீத ரசிகனும்கூட…

எழுந்து வரும் முன் நாட்டைக்குறிஞ்சி ஆலாபனை தொடங்கியிருந்தார். RTP யாக இருக்கவேண்டும். அப்ஸல்யூட்லி ஸாடிஸ்ஃபயிங் என்று ஸ்ரீராம் படங்கள் கொடுத்து அடிக்குறிப்பில் சிலாகித்துள்ளார். நம்புக்கிறேன். அவரே பூர்விகல்யாணியும் மூவிங் என்கிறார். எனக்கு ஹாலை விட்டே மூவிங்காக அமைந்தது.

ஆனால் ஒன்று. அவசர கதி சிலுவையில் அறையப்பட்டிருக்கும் இந்த கால சீசன் கச்சேரிகளில் ஆர்டிபி உருப்படியை எப்படியும் நுழைத்து பாடுவதற்காகவே சஞ்சய்க்கு வந்தனம்.

கச்சேரியின் சேவிங் கிரேஸ் வயலின் மைசூர் ஸ்ரீகாந்த். மற்ற ராகங்களைப்போல, பூர்வி கல்யாணியையும் நன்றாக வாசித்தார். அனைத்து கீர்தனைகளிலும் சஞ்சையின் ஸ்வர விரட்டல்களை மதுரம் குறையாமல், பிசகாமல் தொடர்ந்தார்.

மிருதங்கம் வாசித்தவர் உள்ளூர் மட்டுமின்றி, வெளிநாட்டு கச்சேரி சீசனின் திரைக்குப்பின்னால் உள்ள நெளிவுசுளிவுகளையும் நன்கு அறிந்து அனுசரித்து வெற்றியுடன் வலம் வருபவர். அவர் வாசிப்பை ஏதாவது சொன்னால் மிருதங்கம் வாங்குவது போல அவரிடம் எனக்கும் விழும் என்பதால், அடுத்த கச்சேரியில் சரியாகிவிடும் என்று பவ்வியமாய் தலைவலியுடன் தாண்டிச் செல்கிறேன்.

கச்சேரியில் கடமும் வாசிக்கப்பட்டது. மிருதங்கத்தினுள்.

***

[notice][சஞ்சய் சுப்பிரமணியன், டிசெம்பர் 13, 2009 கர்நாடக சங்காவில் செய்த கச்சேரியின் எண்ணங்கள் | படம் உபயம்: ஸ்ரீராம்][/notice]