மெட்ராஸ் மியூசிக் சீசன் 2009: ரவிக்கிரன் கச்சேரி

Standard

கேட்ட கச்சேரிகளின் தாக்கங்களை சேர்த்துவைத்துக்கொண்டு மொத்தமாக பெரிய கட்டுரை எழுத எத்தனித்து போன வருடம் விழிபிதுங்கியது போல் இல்லாமல், இந்தமுறை அன்று கேட்டதை, ரசித்ததை (ரசிக்காததையும்) அன்றே சொல்லிவிடுவது என்று விஞ்ஞாபனம். என்ன சொல்ல இருக்கும் மேட்டர் சுருக்கமாக முடிந்துவிடும். போகட்டும், காலத்திற்கேற்ப கச்சேரிகளே இரண்டு மணிநேரங்களாக சுருங்கிவிட்டன. பற்றி எழுதும் கருத்துக்களும் அவ்வாறே ஆகட்டும்.

எனக்கு ரவிக்கிரனின் இசையை பிடிக்கும். நமக்கு கை, கால் என்பது போல ரவிக்கிரனுக்கு கை, கால், கோட்டுவாத்தியம்… வாத்தியமும் ஒரு அபண்டேஜ். அவர் உடலின் நீட்சி. சுருக்கமான சங்கதிகளில், இரண்டு மூன்று இழுப்பில் கோட்டுவாத்தியத்தில் எந்த ராகத்தையும் சொரூபம் மாறாமல், அநேகமாக சாஸ்திரம் பிசகாமல், கொண்டுவந்துவிடுவார். மனது வைத்தால் இப்படி செய்யும் இன்னொரு வித்தகர் ஸ்ரீனிவாஸ். மாண்டலினை அபண்டேஜாக கொண்டவர்.

ஒரு நான்கு வருடம் முன்னர் என்று நினைக்கிறேன். நிறுவன மியூசிக் கிளப் ரவிக்கிரனை கச்சேரி கொடுக்க அழைத்திருந்தது. தொடங்கும் முன்பே சென்று, என் போதாதவேளை, முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். சக வாத்தியக்காரர்களுடன் ரவிக்கிரன் சரியான நேரத்திற்கு சற்று முன்னராகவே வந்து வாத்தியங்களை மேடையில் அமைத்துக்கொண்டிருந்தார். மைக் நன்மைக்காக இல்லாமல், தீமைக்காக சற்று படுத்திவிட்டது. இன்ன பிற சிறுசிறு உபாதைகள் சங்கடங்கள். சபா காரியதரிசியிடம் (மாணவர்) யார் சபா நடத்துபவர் என்று ரவிக்கிரன் கேட்டிருக்கிறார். இன்னமும் வரவில்லை (ஏன் லேட்?). சங்கடத்தில், மாணவர் என்னை கை காட்டிவிட்டார். நானும் ஏதோ தேவையோ என்ற நல்லெண்ணத்தில் ரவிக்கிரனிடம் என்ன வேண்டும் என்றேன்.

பொங்கிவிட்டார்.

மேடையில் அமர்ந்தபடி ஒரு ஐந்து நிமிடம் ஆங்கிலத்தில் பங்க்சுவாலிட்டி பற்றி, மற்றும் என் நிறுவனத்தின் சிறப்பு, அதை எப்படி லேட்டாக வராமல் கட்டிக்காக்கவேண்டும் என்றெல்லாம் அறிவுரை. என்னை பதில் பேச விடவில்லை. வயலினிஸ்டிலிருந்து சுற்றிலும் ரசிகர்கள், வாத்தியார்கள்வரை அனைவரும் என்ன, என்ன, என்று வேடிக்கை.

எனக்கு பயங்கர கடுப்பாகிவிட்டது. இத்தனைக்கும் நான் சபாவில் ஒன்றுமே கிடையது. சும்மா கச்சேரி கேக்க வந்த ஆள். சரியான நேரத்திற்கும் வந்து விட்டேன். சபா நடத்துபவர் வரவில்லையே என்று நடுவில் உதவிசெய்ய போனேன். டை ஹார்ட் புரூஸ் வில்லீஸ் போல ராங் மேன், அட் த ராங் டைம் இன் த ராங் ப்ளேஸ். அதற்கு இப்படி ஒரு அர்ச்சனையா. வந்த கோபத்தை, நான் ஏதாவது சொல்லி அவர் கச்சேரியை நடத்தாமல் போய்விடப்போகிறாரே என்று, அடக்கிக்கொண்டேன்.

வேடிக்கை என்னவென்றால், கச்சேரி தொடங்கியதும் சற்று லேட்டாக சபா ஆர்கனைசர் (நான் வாங்கிக்கட்டிக்கொண்டதின் சொந்தக்காரர்) உள்ளே நுழைய, வாசித்துக்கொண்டே ரவிக்கிரன் புன்னகையுடன் அவருக்கு வணக்கம் சொல்ல, இவரும் ஏற்றுக்கொண்டு ஜம்மென்று முன்சீட்டில் அமர்ந்து… ஆனந்தம்.

நான் எழுந்து வந்துவிட்டேன். பிறகு போகப்பிடிக்கவில்லை. நானும் குறை மனிதன்தானே.

இதற்கப்புறமும் ரவிக்கிரனின் இசை எனக்கு பிடிக்கும். இன்றும் பிடித்திருந்தது.

உருப்படிகள் ரீதிகௌளை (தத்வமறிய தரமா – சிவன்), பந்துவராளி (என்னகானு ராமபஜன – தியாகைய்யர் பத்ராசலம் ராமதாஸர்), நீலாம்பரி (நீகேதயராது – தியாகையர்), கருடத்வனி (தத்வமெருகதரமா-பர-தியாகையர்), ஹேமவதி (ஸ்ரீகாந்திமதிம் – தீக்ஷ்தர்), சாமா (மானசசந்சரரே – சதாசிவ பிரம்மேந்திரர்), தோடியில் துக்கடா, மங்களம்.

அநேகமாக அனைத்து உருப்படிகளுக்கும் சற்றேனும் ராகம் வாசித்தார் (வாவ்). மெயின் ஹேமவதி (வாரே வாவ்); சப்-மெயின் நீலாம்பரி (வாரே வாரே வாவ்) அல்லது பந்துவராளி. கச்சேரியில் என் பெஸ்ட் நீலாம்பரி ராக ஆலாபனை. நீலாம்பரி தூங்கவைக்க பாடும் ரகம் என்று ஒரு கற்பிதம். மாதவ மாமவ தேவா என்று எம்.எஸ். துக்கடா பாட்டு பிரபலம். கச்சேரியில் பாடினால் ரசிகர்கள் தூங்கிவிடுவார்களே. பாடத்தெரியாமல், கச்சேரியில் கற்பனை எழும்பாமல் முடியாமல் போனவர்களுக்கு பொழைக்க இப்படி பல நொண்டிச்சாக்குகள் புழக்கத்தில் உள்ளது.

நிஜத்தில் நீலாம்பரியில் சில நுணுக்கமான இடங்கள் உண்டு. காதைதீட்டிக்கொண்டு கேட்கவேண்டும். மொத்தமாக முழித்துக்கொண்டுவிட்டேன் (முன்னர் வந்த பந்துவராளியில் சற்று சொக்கிவிட்டேன். சத்தியமாக, வாசிப்பினால்தான்). என்றோ, யுகாந்திரத்தில், டி.கே.ரங்காச்சாரி மைசூர் கச்சேரியில் ஆலாபனை பின்னியிருக்கிறார் (நமக்கு வெறுப்பாக மைசூர் ஆடியன்ஸோனோ, நல்லா கேப்பா என்று கச்சேரியிலேயே சொல்வார்). இன்று ரவிக்கிரனும் அருமையாக வாசித்தார்.

நீலாம்பரி, பிறகு கருடத்வனி. இதுவும் டி.கே.ர. கலக்கிய ராகம்தான். ஒரே ராகத்தின் (சங்கராபரணம்) ஜன்யமான இரண்டு ராகங்களை தொடர்ந்து வாசித்தது ஒரு வியப்பு (ரவிக்கிரனே குறிப்பிட்டார்). மற்றொன்று, இரண்டு ராகங்களும் சற்றும் சம்பந்தமில்லாது வெவ்வேறுமாதிரி வடிவமைந்துள்ளது. தில்லுமுல்லு சந்திரன் இந்திரன் மாதிரி.

இன்று கச்சேரியில் கவனித்த வித்தியாசமாக இரண்டு: படு ஸ்பீடாக பெரிய வாக்கியமாக ஸ்வரக்கோர்வைகளை வாசித்துக்கொண்டிருக்கையில், சடாரென்று வழுக்கி ராகத்தின் சொரூபத்தை மெலடியாக குழைப்பது, கோட்டுவாத்தியதிலும், ரவிக்கிரனாலும் மட்டும் முடிந்த சிறப்போ. இன்னொன்று ஹேமவதி ஸ்வரங்களில் தான் வாசித்ததை வாசிக்கச் செய்யாமல், வயலினை தான் விட்டதில் இருந்து மெருகூட்டி ஸ்வரகல்பனை செய்யச்சொல்லி, பின் வயலின்முடிக்கும் தருவாயில் தான் இடைபுகுந்து ஸ்வரங்களை பிக்கப் செய்துகொண்டு போனது அழகாக அமைந்த ஆக்கம்.

வயலின் இன்று சுமார்தான். ஸ்லேட்டில் பலப்பத்தை படுக்கவைத்து கீறுவதுபோல நாதமே சரியில்லை. ஆனாலும் ஸ்வரகல்பனைகளில் ஈடுகொடுத்தே இருந்தது வாசிப்பு. மிருதங்கம் அருண்பிரகாஷ். குறிப்பாக நீலாம்பரியில் அனுபல்லவியிலும் சரணத்திலும் முறையே அடக்கியும், ஓங்கியும், பின் தனியில் அமர்களப்படுத்தி வாசித்து… பேஷ்.

சீசன் தொடக்கத்தில், நல்ல கச்சேரி.

[ரவிக்கிரன் @ கர்நாடக சங்கா, டி.நகர். டிசெம்பர் 6, 2009]