அறிவியல் பற்றி அதை உருவாக்கும் அல்லது பயன்படுத்தும் அறிவியலாலர்களும், தன்ஆர்வலர்களும், சாமான்யர்களுக்கு நிறைய சொல்லவேண்டும் என்று நமக்கு பொது எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி செய்ய முன்வராதபோதோ அல்லது அவ்வகை முயற்சிகள் நமக்கு சரியாக பலனளிக்காதபோதோ கோபப்படுகிறோம். பல வேளைகளில், கண்மூடித்தனமாக. முக்கியமாக தாய்மொழியில் அறிவியலை முழுவதுமாக பழகிக்கொண்டால் அதை பயமின்றி கற்பது எளிது என்றும் நினைக்கிறோம். பல விவாதங்களில் இவ்வகை கருத்துக்களை முன்வைக்கிறோம்.
சார்பாக ஒரு விஷயத்தை மட்டும் இங்கு யோசிப்போம். வலை (இன்டெர்நெட்) பண்டிதனையும் பாமரனையும் பாரபட்சமின்றி எளிதில் தொடர்பு செய்ய வல்லது, சாகா வரம் பெற்றது. அதனால் அது நிச்சயம் புதுமுறையில், எளிதாக அறிவியலை வளர்க்க வல்லது என்று விவாதங்களை படித்து, கேட்டு இருக்கிறோம். இது சரியா? நடைமுறையில் சாத்தியமா? இந்தியாவிலுமா?
இந்தியாவில் அறிவியலை வளர்க்க வலை(தான்) சிறந்த ஊடகமா?
மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னர் உடனே ஆம் என்று பதில்கூறியிருப்பேன். இதென்ன அபத்த கேள்வி என்று கிண்டலாடியிருப்பேன். சென்றவாரம் ஒரு புள்ளியியல் ஆய்வை பார்ப்பதற்கு முன்.
கீழே உள்ள விவரம் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகதெமியின் 2004இல் பொதுமக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பினைக்கொண்டு எழுதிய ஆய்வுகட்டுரையில் இருந்து எடுக்கப்பட்டது (மொத்த கட்டுரையும் சுட்டி [1]ல் தரவு செய்துகொள்ளலாம்).
கருத்துக்கணிப்பில் சந்தேகம் வேண்டாம். ஏழை, ஏழையல்லாதோர், படித்தவர், படிப்பை அண்டாதோர், கிராமவாசி, பிறஇடவாசி, ஆண், பெண், மற்றவர் என அனைத்து இந்திய சாமான்யதரப்பினரின் அபிப்பிராயமும் உள்ளடக்கப்பெற்றுள்ள கணிப்பு.
என்ன கூறுகிறது?
முதல் படம், எவ்வகை ஊடகங்களில் உங்களுக்கு நம்பகத்தன்மை மிகுதி (தல, எதுல சொன்னா நீ ஒத்துப்ப) என்ற கேள்விக்கு இந்திய மக்களின் பதில். மெரும்பான்மையான வாக்குவித்தியாசத்தில் (70% மக்கள் நம்புகிறார்கள்) முதலில் வருவது தொலைக்காட்சி. அடுத்தது ரேடியோ மற்றும் நாளிதழ்கள். வலை சுத்தமாக டெபாஸிட் இழந்து 5 சதவிகிதத்திற்கும் கீழான மக்களே நம்பத்தகுந்தது என்று வருகிறது. ஆனால் ஒன்று. வலையின் நம்பகத்தன்மை பற்றி தெரியவில்லை என்றுதான் பெரும்பான்மையினர் கூறியுள்ளனர் (படத்தில் சிவப்பு பட்டையின் உயரம்).
இரண்டாவது படம் எந்த ஊடகத்தில் இருந்து நீங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய விஷையங்களை தெரிந்துகொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு இந்திய மக்கள் கூறியிருக்கும் பதில். இங்கும் தொலைக்காட்சியே முன்னணி. ரேடியோ, நண்பர்கள், நாளிதழ்கள் என்று மற்ற விஷய (வம்பு?) ஊற்றுகளில் உள்ள நம்பிக்கை வலையிடம் மக்களுக்கு இல்லை. போனால் போகட்டும் என்று சிலர் புத்தகங்களில் இருந்து அறிவியல் தெரிந்துகொள்கிறார்கள். வலையை சுத்தமாக காணோம். இன்னபிற (others) என்ற இடத்தில் மறைந்திருக்கிறது எனவேண்டுமானால் மீசையில் மண்ணொட்டிக்கொள்ளாமல் இருக்கலாம்.
இந்தக் கருத்துக்கணிப்பு ஏன் இவ்வாறு முடிவுகளை கொடுத்திருக்கிறது என்று அனுமானிக்கலாம். உதாரணத்திற்கு, இந்திய மக்கள் பெரும்பான்மையினர் வீட்டிலோ வேலையிடத்திலோ வலை தொடர்புடைய கணினி வசதி இல்லாதவர் என்று கூறலாம். உண்மையாகவும் இருக்கலாம். தீர்வாக அடுத்த தேர்தலில் இலவசமாக வலை தொடர்புடைய கணினியும், உபரியாக அடிக்கடி செத்துப்போகாத வலை தொடர்ப்பும் (கூடவே பாக்கெட்டில் இலவச மின்சாரமும்) தருவதாக வாக்குறுதி அளிக்கலாம. பிறகு நிறைவேற்றவும் செய்யலாம்.
கணினி, வலை தொடர்பு, என்பதெல்லாம் தீர்வின் ஒரு பகுதிதான். வேடிக்கை (அல்லது வேதனை) என்னவென்றால், இதுநாள்வரை மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரை இலவசமாக வலையிலேயே இருக்கிறது. தேவையானவர், அதாவது பொதுமக்கள் (எழுதும் நான் உட்பட) கண்களில் போதியமட்டும் படாமல். இது ஒருவகை அத்தாட்சி. வலையை அறிவியல் சார்ந்த விஷயங்களுக்கு இந்தியர்கள் பயன்படுத்துவது சொற்பமோ என்ற எண்ணம் நிலைபெற. மேலும் விவாதிக்கலாம். வேறு கட்டுரையில் விரிவாக செய்வோம்.
கருத்துக்கணிப்பு 2004இல் எடுத்ததுதான். 2009திற்குள் நிலைமை தலைகீழ் என்றால் அது உடான்ஸ். சற்று மாறியிருக்கலாம். எனக்கென்னவோ இந்தியாவில் வலையலகு என்பது சமுதாயத்தில் ஏதோவகையில் அருதியிட்ட ஒரு மேட்டுத்தரப்பு குறைந்த சதவிகிதத்தினர் மட்டும் உபையோகப்படுத்தும் ஊடகம் என்று தோன்றுகிறது. இந்த குறைந்த சதவிகிதத்திலும் குறைவான ஒரு சிறு சதவிகிதமே அறிவியல் படிப்பதற்கு இல்லை மேய்வதற்கு வலையை உபயோகிக்கிறார்கள்.
இந்த நிலைமை இதோ அடுத்த சில வருடங்களில் மாறிவிடும் என்று எனக்கும் நம்ப ஆசை.
கட்டுரை சுட்டிகள்
[1] ஆதாரம்: 2004 Indian Science Survey Report – மொத்த ரிப்போர்டும் pdf கோப்பாக Indian National Science Academy வலைதளத்தில் இருக்கிறது.