உங்கள் க்யூ எழுத்து எப்படி

Standard

நீங்கள் மற்றவர் கவனிப்பை விரும்புபவரா இல்லை குடத்தில் இட்ட விளக்கா? இதை எளிதான ஒரு சோதனை மூலம் சொல்லமுடியும் என்கிறார் சைகாலஜி பேராசிரியர் ரிச்சர்ட் வைஸ்மன். சமீபத்தில் அவர் எழுதிய குவிர்காலஜி (Quirkology) என்கிற புத்தகத்தில் எப்படி என்று ஒரு ஜாலி சோதனை மூலம் விளக்குகிறார். ஆனால், கவனிப்பை விரும்புவதால் நீங்கள் குழந்தையா, இல்லை, குடம் கோபுர உச்சியில் இருக்கிறதா என்பதெல்லாம் வேறு விஷயம். குவிர்காலஜி (புரட்டுவியல்?) தினவாழ்வின் சாதாரண ஆனால் ஏன் என்று தெரிந்துகொள்ள ஆவலைத்தூண்டும் நிகழ்வுகளை அறிவியல் முறைகளை பயன்படுத்தி அனுகி புரிந்துகொள்ள முயலுவது. இதுவும் சைகாலஜியின் ஒரு வகைதான் என்கிறார் இந்த வார்த்தையையும் சிருஷ்டித்துள்ள வைஸ்மன்.

ஆவலைத்தூண்டும் விஷயங்கள் என்றால் இவர் ஆராய்ந்துள்ள விஷயங்களிலிருந்து சில உதாரணங்கள் இதோ:

கால்பந்து, கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஆட்டம் சோபிக்காமல் போகையில் சுய தண்டனையாக மெக்ஸிகன் வேவ் என்று மக்கள் அலை அலையாய் எழுந்து எழுந்து அமருவார்களே, அதை தொடங்க குறைந்தபட்சம் எவ்வளவு பேர் ஸ்டேடியத்தில் இருக்கவேண்டும்; ஞாபகசக்திக்கு நிஜமாகவே ஒரு உச்சவரம்பு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள பலரிடம் பத்தாயிரம் படங்களை கொடுத்து ஞாபகத்தில் இருத்திக்கொள்ள சொல்வது; பேஸ்பால் கேப்பை எவ்வளவு பேர் முன்பக்கத்தை திருப்பி ஸ்டைலாக பின்பக்கம் அணிகிறார்கள் (உங்களுக்கு என்ன சார் மூஞ்சி முதுகுபக்கம் இருக்கு…); பழங்களுக்கு மனிதர்களைப்போல் தனிப்பட்ட குணங்கள் இருக்கிறதா (மிளகாயை சாப்பிடாதீங்க சார் அதுக்கு முன் கோபம் ஜாஸ்தி)… இப்படி பல.

வேடிக்கையில்லை, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து சோதனைகளின் முடிவுகளும் இவர் எழுதி சக அறிவியலாலர்களால் மதிப்புரை செய்து ஆராய்ச்சி கட்டுரைகளாக சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.

சரி, நம் விஷயத்திற்கு வருவோம். இதை செய்துபாருங்கள். இடதோ, வலதோ, உங்களுக்கு வாகான கையின் ஆள்காட்டி விரலால் உங்கள் நெற்றியில் ஆங்கில எழுத்து Qவை வரையுங்கள். செய்துவிட்டீர்களா? தொடர்ந்து படிப்பதற்குமுன் செய்துவிடுங்கள்.

கவனித்தீர்களென்றால், இதை நீங்கள் இரண்டு மாதிரி செய்திருக்கக்கூடும். வரைந்த (அல்லது எழுதிய) Q வின் குறுக்குக் கோடு வட்டத்தில் எங்கு போடுகிறீர்கள் என்பதை பொருத்து, ஒன்று உங்களால் சரியாக படிக்கமுடிகிறமாதிரி எழுதியிருப்பீர்கள், இல்லை, உங்கள் எதிரில் இருப்பவர் உங்கள் நெற்றியை பார்த்து சரியாக படிக்க முடிகிறமாதிரி எழுதியிருப்பீர்கள். அருகில் இருக்கும் படத்தை பாருங்கள் புரியும். நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். சோதனை அவ்வளவுதான். இனி முடிவும் விவாதமும்.

இது நம் உள்மனதை பற்றி அனுமானிக்கக்கூடிய ஒரு சுய தகவல் சோதனை என்கிறார் வைஸ்மன். தங்களை பற்றி ஒரளவிற்குமேல் அதிகமாக விளம்பரப்படுத்துபவர்கள் தங்கள் நெற்றியில் Qவை முக்கால்வாசி நேரம் அடுத்தவர்கள் படிக்கிறமாதிரிதான் எழுதுவார்களாம். தங்களை பற்றி அதிகம் சொல்லிக்கொள்ள விரும்பாதவர்கள், தெரியாதவார்கள், Qவை அவர்களுக்கு படிக்கிறமாதிரி எழுதுவார்களாம்.

அதிக சுய விளம்பரப்பிரியர்கள் (நா எப்போதும் சுடர்மணி ஜெட்டிதான், நீங்க…ரகம்) அடுத்தவர்கள் தங்களை எப்படி நினைக்கவேண்டும் என்பதை கவனமாக, பொய்யாக, சிருஷ்டிக்க விழைவார்கள். இதனால் பொய் சொல்வது இவர்களுக்கு சுலபமாக வரும். தங்களை பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவர்கள் இப்படி இல்லை. இவர்களின் செயல்கள், நடப்பு, பற்றிய கூட்டத்தின் சிந்தனை, கவலைகள் இவர்களை அவ்வளவு சுலபமாக பாதிப்பதில்லை. இவர்களுக்கு தங்களை பற்றிய சுய மதிப்பீடுதான் முக்கியம். தேவை. தங்களது செயல், வெளிப்பாடு எவ்வளவு அடுத்தவர்களை பாதிக்கிறது என்பது பற்றி இவர்களுக்கு ஏறாது. இதனால் இவர்களுக்கு பொய் சுலபமாய் வராது. பேத்துமாத்து செய்யத்தெரியாது.

இதில் எந்த மாதிரி இருப்பது நல்லது என்பது பற்றி இப்போது விவாதம் இல்லை. ஆனால், பலரிடம் பலவருடம் நெற்றியில் Qவை எழுதக்கேட்டு சோதித்தபின் வைஸ்மன் சொல்லும் முடிவு இது.

இந்த சோதனை மூலம் வைஸ்மன் இன்னொரு விஷயத்தையும் உணர்ந்து சொல்கிறார்.

எதற்கு மனிதர் இப்படி முகஎழுத்தை செய்யச்சொல்கிறார் என்று தெரிந்ததும் முதலில் ஒரு விதமாக எழுதியவர்களில் பலர், தாங்கள் அதற்கு நேர்மாறாகத்தான் எழுதினோம் என்று சாதிக்கிறார்களாம். இப்படி தாங்கள் எந்த மாதிரி என்று மக்கள் நினைக்கவேண்டும் என்பதற்கேற்ப முதலில் வந்த முடிவை சாதகமாக மாற்றிக்கொள்வதும் இந்த சோதனையின் மற்றொரு உபயோகமே. தங்களை தாங்களே எவ்வளவு ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்பதை குத்துமதிப்பாக தெரிந்துகொள்ள உதவுகிறது என்கிறார் வைஸ்மன்.

வைஸ்மன் எழுதியுள்ள குவிர்காலஜி புத்தகத்தில் மேலே எழுதிய சோதனையை பற்றி படித்ததும் எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகிறது.

யோசித்துப்பார்த்தால் இந்த சோதனை Qவை போல மிர்ரர் ஏஸிமட்ரி உள்ள எழுத்துக்களுக்கு பொருந்தும் என்று தோன்றுகிறது. அதாவது எழுத்தின் குறுக்கே செங்குத்தாக ஒரு கோடு போட்டு, கோட்டின் இடம் வலமாக உள்ள எழுத்தின் பாகங்களின் அங்க லட்சணங்கள் பொருத்தமாக இருந்தால், வலத்தை இடமாகவோ, இடத்தை வலமாகவோ மாற்றிப் போட்டாலும் எழுத்து நமக்கு தெரியும் விதம் மாறாது அல்லவா, அது தான் மிரர் ஸிமெட்ரி.

ஏஸிமெட்ரி என்றால் இப்படி அங்க லட்சணம் இல்லாத எழுத்து. உதாரணத்திற்கு Qவை போலவே, R, E, P இவற்றை நெற்றியில் எழுதச்சொன்னாலும் மேற்கூறியபடி இரண்டு விதமாக வித்தியாசம் வரும்படி எழுதமுடியும் (A, U போன்ற எழுத்துக்களில் வித்தியாசம் வராது).

ஆங்கிலம் தெரியாதவரிடம் கண் டாக்டர் காட்டி படிக்கச்சொல்வதுபோல Q எழுத்தை காட்டி எழுதுங்கள் என்று சொன்னால் இச்சோதனையின் முடிவுகள் அவருக்கு பொருந்துமா?

பொருந்தும் என்று தோன்றுகிறது. ஆங்கிலம் தெரிந்தவருக்கும் சோதிக்கையில் எதற்கு எழுதச்சொல்கிறார்கள் என்று தெரியாது. அவருக்கும் எழுதுகையில், அதாவது சோதனையின் ஆரம்பத்தில், Q என்பது ஒரு அர்த்தமற்ற குறியே. அவர் எழுதியதை வைத்து அவருடைய உள்மனதை அறியமுடியும் என்றால், ஆங்கிலம் தெரியாதவருக்கும், ஏதோ ஒரு குறி என்று அவர் நினைத்து எழுதுகையில், இச்சோதனை பொருந்தும். இப்படி வாதிடலாம்.

சரி, இப்படி பார்த்தால் மொழிமட்டும் ஒரு பொருட்டா? எந்தமொழியில் இச்சோதனையை செயல்படுத்தினாலும் முடிவுகள் மேற்கூறியவாறு அமையும் என்று கருதலாம் போல் இருக்கிறதே. உதாரணத்திற்கு, தமிழில் ஏறக்குறைய எல்லா எழுத்துக்களுமே மிரர் ஏஸிமெட்ரி உடையவையே (ப, ய போன்றவை நீங்கலாக). தமிழில் இச்சோதனையை செய்தால் தகுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முடிவாக, தெரியவேண்டுமென்றால், சோதனையின் முடிவு பற்றி தெரிந்துகொள்ளாமல் முயற்சிக்கையில், நான் Qவை எனக்கு தெரிகிறமாதிரிதான் எழுதினேன். ஆனால், இதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலில், விளம்பரத்தில், இப்போது எழுதிவிட்டேன்.
———–

கீழே வீடியோவில் நிறம் மாறும் சீட்டுக்கட்டு தந்திரம் பாருங்கள். செய்பவர் வைஸ்மன். இதுவும் மற்றொரு குவிர்காலஜி சைகாலஜி சோதனைதான். பிரமிப்பாக இருக்கும்.

கட்டுரை சுட்டிகள்

  • குவிர்காலஜி பற்றி வைஸ்மன் ஒரு YouTube வீடியோ தளமும், மேற்கூறிய சோதனையை போல பல உள்ள ஒரு வலை தளமும் வைத்திருக்கிறார். விளையாடிப்பாருங்கள்.