கோரோட் எக்ஸோ ஏழு பி பட்டறை

Standard

உலகின் மிகப்பெரிய பாம்பு பற்றி படித்தோம். அண்டத்தில் நமக்கு தெரிந்த மிகச்சிறிய உலகம் (கிரகம், கோளம்) எது தெரியுமா. கோரோட் எக்ஸோ ஏழு பி என்று பெயர். நிஜமாகவே சுடச் சுடச் (மேற்பரப்பின் வெப்பம் ஆயிரம் டிகிரிக்கும் மேலாம்) ஒரு வாரம் முன்னர்தான் (Feb 3, 2009) பிரஞ்சு வானவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் [1]. CoRoT-Exo-7b பெயர் காரணம் உண்டு. CoRoT என்பது பூமியை சுற்றிவரும் ஒரு தொலைநோக்கி செயற்கைகோள் [2]. ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி போல. ஐரோப்பியர்களால் 2006இல் ஏவப்பட்டது. கோரோட் என்பது ஆங்கிலத்தில் கன்வெக்‌ஷன் (Convection – வெப்பசலனம்), ரொடேஷன் (Rotation – சுழற்சி), டிரான்சிட் (Transit) என்பதன் சுருக்கம். இந்த விஷயங்களை நட்சத்திரங்களிலும், (இருந்தால்) அதன் கிரகங்களிலும் தொலைநோக்கி ஆராய்ந்து செய்தி அனுப்புகிறது. எக்ஸோ என்பது சூரியமண்டலத்திற்கு அப்பால் என்பதை குறிக்கிறது. ஏழு பி என்பது என் பழைய வீட்டு நம்பர்; ஸாரி, ஏழு மோனோசெரஸ் கூட்டத்தில் உள்ள  நட்சத்திரத்தின் நம்பர். ஏழு பி, சுற்றும் கிரகத்திற்கு பெயர். மேலே செல்வோம்.

exo7-f1

இந்த கிரகம் மோனோசெரஸ் [3] என்ற நட்சத்திர கூட்டத்தில் உள்ள நம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை பிரதட்சணம் செய்துகொண்டிருப்பதை இந்த கோரோட் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. எப்படி? ஒரு சுவாரசியமான முறையில்.

அதற்குமுன் மோனோசெரஸ் நட்சத்திர கூட்டம் பற்றி. தமிழ்நாட்டில் இருந்தால் இரவு சாப்பிட்டவுடன் அப்படி காலார வெளியே சென்று அண்ணாந்து பார்த்தால் தலைக்கு மேல் (பகலில் சூரியன் செல்லும் பாதையில்) ஒரு பெரிய X குறியை மனதால் சேர்த்து பார்க்கமுடிவதைபோல நான்கு பிரகாசமான நட்சத்திரங்கள் தெரியும் (X குறி இவற்றை தன் நான்கு முனைகளில் இணக்கும்). அ தன் நடுசெண்டரில் (X இன் வயிற்றில்) குறுக்காக மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். இவையெல்லாம் சேர்ந்து ஓரையன் (Orion) எனப்படும் நட்சத்திர கூட்டம். ஓரையன் கிரேக்க புராண ங்களில் வேடுவர். ஓரையனின் நடுவே இருக்கும் மூன்று நட்சத்திரத்தில் இரண்டு நம் அஸ்வினி, பரணி. இப்படி நம் 27 நட்சத்திரமும் வானில் எங்கு இருக்கிறது என்று வேறு கட்டுரையில் பார்ப்போம். இந்த ஓரையன் கூட்டத்திற்கு சற்று வடக்கில், மேலே சொன்ன மோனோசெரஸ் கூட்டம் இருக்கிறது. நேராக கண்ணிற்கு தெரியும் அளவு அவ்வளவு பிரகாசம் இல்லை. சரி, இப்போதைக்கு இது போதும். இனி கிரகத்தை எப்படி கண்டுபிடித்தார்கள் என்று பார்ப்போம்.

exo7-f3நாம் தொலைநோக்கி வழியாக நட்சத்திரத்தை பார்த்துக்கொண்டிருக்கையில் நமக்கு அது ஒரு பிரகாசத்துடன் தெரியும். கிரகம் தான் சுற்றும் நட்சத்திரத்தை காட்டிலும் அநேகமாக மிகச்சிறியதாக இருக்கும் அல்லவா. மேலும், நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் நமக்கும் நட்சத்திரத்திற்கும் நடுவே (நட்சத்திரத்திற்கு மிக அருகே) இயங்கிக்கொண்டிருக்கும் இல்லையா. அதனால் அது நட்சத்திரத்தை வலம் (அல்லது இடம்) வருகையில், நாம் தொலைநோக்கி வழியாக பார்க்கும் நட்சத்திரத்தின் பிரகாசத்தை தன் பாதையில் சற்று குறைத்துவிடும் இல்லையா. அப்படி குறைந்த பிரகசத்தின் அளவை நட்சத்திரத்தின் சரியான பிரகாசத்துடன் ஒப்பிட்டு, அதன் மூலம் ஒரு கோளம் நட்சத்திரத்தை சுற்றுகிறது என்று அநுமானிப்பார்கள். அருகே உள்ள அனிமேஷனை பாருங்கள். புள்ளியாக கோளம் இடமிருந்து வலமாக நட்சத்திரத்தை சுற்றுகையில் பிரகாசத்தை குறைப்பது விளங்கும்.

exo7-f2

இத ற்கு டிரான்ஸிட் (transit) கண்டுபிடிப்பு முறை என்று பெயர் (CoRoTடின் T இந்த டிரான்ஸிட்டைத்தான் குறிக்கிறது). இதைபோல கிரகத்தை கண்டுகொள்ள ரேடியல் முறையும் இருக்கிறது. இரண்டு முறையிலும் தேடி நிஜமாகவே கிரகமா இல்லை நட்சத்திரம் சும்மா அணைந்து அணைந்து எரிந்து ஏமாற்றுகிறதா என்று சரிபார்த்துவிடுவார்கள்.

மேலும், கோளம் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதால் இந்த பிரகாச குறைவு மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிகழுமாகையால், இதன் நிகழ்-கால-தாமதத்தை வைத்து கோளம் ஒருமுறை சுற்றிவர ஆகும் காலத்தை, அ தாவது அதன் ஒரு வருட காலத்தை, கணக்கிடமுடியும். இப்படி செய்ததில் இந்த புதிதாக கண்டுள்ள கிரகத்தின் ஒரு வருட காலம் எவ்வளவு தெரியுமா. பூமியின் 20 மணி நேரம் (தான்). அதாவது இதன் ஒரு வருடம் பூமியின் கிட்டதட்ட ஒரு நாள். இதுவரை மிகச்சிறிய வருட காலத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸோ கிரகம் இதுதான்.

தொலைநோக்கியில் தெரியும் நட்சத்திரத்தின் மொத்த பரப்பையும் கோளம் குறுக்கிடுகையில் ஒரு தருணத்தில் அதன் நிழலால் ஏற்படும் பிரகாசகுறைவின் பரப்பையும் வைத்து கோளம் எவ்வளவு பெரியது (உருண்டை என்று எடுத்துக்கொண்டு, அதன் விட்டம் எவ்வளவு) என்றும் கணக்கிடமுடியும். இப்படி செய்ததில் இக்கோளம் பூமியைவிட 1.8 அ ளவு பெரியது என்று தெரிகிறது [4, 5].

இதுவரை வானவியளாலர்கள் சூரியன் அல்லாத வேறு நட்சத்திரத்தை சுற்றும் கிரகங்கள் 330 கண்டுபிடித்துள்ளார்கள். இது பத்தோடு பதினொண்று. ரொம்ப ஆச்சரியப்பட தேவையில்லைதான். ஆனால் இதுவரை கண்டுபிடித்ததில் இதுதான் மிகச்சிறிய, கிட்டதட்ட பூமியை போன்ற, கோளம். சுற்றும் நட்சத்திரமும் நம் சூரியனைப்போல ஒரு சாதாரண நட்சத்திரம் (ஏன் சாதாரண என்று வேறு கட்டுரையில் எழுதுகிறேன்). இதன் அடர்த்தி பூமியின் அடர்த்தி அளவு போலத்தான் என்கிறார்கள் (ரேடியல் முறைப்படி இதை கண்டுகொள்ளவேண்டும்). எதனாலானது? பரப்பு மொத்தமும் எரிமலைக்குழம்பு போல இருக்கலாம், இல்லை சூப்பர்க்ரிடிக்கல் அழுத்தத்தில் தண்ணீராகவும் இருக்கலாம். கிரகம் முழுவதுமே ஒரு பெரிய ஹாட்-பாத் போல.

போய் ஒரு குளியல் போடலாம். என்ன, மொத்தமும் இரும்பை உருக்கும் உஷ்ணத்துடன் இருக்கிறது.

அதான், சந்திரனில் காயலான்கடை போல, தலைப்பில் கோரோட் எக்ஸொ ஏழு பி பட்டறை.

கட்டுரை சான்றேடுகள்

1.     http://www.obspm.fr/actual/nouvelle/feb09/exo7.en.shtml

2.     http://smsc.cnes.fr/COROT/

3.     http://en.wikipedia.org/wiki/Monoceros

4.     http://en.wikipedia.org/wiki/COROT-Exo-7b

5.     http://www.nature.com/news/2009/090203/full/news.2009.78.html