குழந்தைக்கு வயிற்றுப்போக்கென்றால் என்ன செய்வீர்கள்?

Standard

உங்கள் (நண்பர், அன்பர்) குழந்தைக்கு வயிற்றுப்போக்கு என்றால் என்ன செய்வீர்கள்: திரவ ஆகாரத்தை (நீர், குளுக்கோஸ் கரைசல் போன்றவை) பொறுத்தமட்டில் அவளுக்கு 1) அதிகமாக கொடுப்பீர்கள் 2) திரவங்கள் குடுப்பதை உடனடியாக குறைப்பீர்கள் 3) ஒன்றும் செய்யமாட்டீர்கள்.

சமீபத்தில், இந்த கேள்வி புள்ளியியல் வரையரைக்குட்பட்ட மாதிரி இந்திய மக்கள்தொகையிடம் கேட்கப்பட்டதாம். கீழே உள்ள படத்தில் பதில் இரண்டு (திரவம் பருகுதலை குறைப்போம்) என்று கூறியவர்களின் மாநிலவாரியான சதவிகிதம் இருக்கிறது.

brookings

[படம் ஆதாரம்: ‘Breaking Out of the Pocket’ by Peter Boone and Simon Johnson, Brookings Global Economy and Development Conference [1]]

மேலே செல்லும்முன், பதில் இரண்டு தவறு. பதில் ஒன்று, அதாவது, திரவ உள்ளீட்டை அதிகரிக்கவேண்டும் என்பது சரியான செய்கை. (மொத்த சிகிச்சையும் இதுவே இல்லை. டாக்டரிடம் காட்டி அவர் சொல்படி செய்வது முறை).

வயிற்றுப்போக்கு தொன்றுதொட்டு வந்துபோகும் விஷயம். தலைமுறையாக,  குழந்தையில் அனைவரும் அனுபவித்திருக்கிறோம். இதற்கு திரவ உள்ளீட்டை அதிகப்படுத்துவதா குறைப்பதா என்பதும் தலைமுறையாக இருக்கும் சந்தேகமே. நம் நாடு மட்டுமில்லை; பல நாட்டு மக்களும் இதில் குழம்பி உள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல நாட்டு மக்களும் தீர்வாக, பதில் இரண்டு என்று ஒரு மன மாதிரியை தோற்றுவித்துக்கொண்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், வயிற்றுப்போக்கு திரவரூப வெளியேற்றமாக நேர்வதால், திரவம் பருகுவதையும், உள்ளீட்டையும் குறைத்துவிட்டால் நின்றுவிடும் என்று பொது அறிவில் காரணம்-விளைவு-தீர்வு அனுமானிக்கத்தோன்றுகிறது.

ஆனால் பொதுஅறிவு சிலவேளைகளில் இப்படி ஏமாற்றிவிடும்.

திரவ உள்ளீட்டு அளவை குறைத்தால், ஏற்கனவே வயிற்றுப்போக்கால் திரவங்களை இழந்த உடல் திரவப் பற்றாக்குறை வந்து மேலும் துவண்டுவிடும். திரவத்தை அதிகரிக்கையில், வயிற்றுப்போக்கினால் அதுவும் வெளியே வரத்தான் செய்யும். ஆனால் உடல் திரவப் பற்றாக்குறையால் அவதிப்படாது. மேலும், வயிற்றுப்போக்கிற்கு காரணமான ஒட்டுவாரொட்டிகளும் திரவத்துடன் சேர்ந்து வெளியேறிவிட வாய்ப்புகள் அதிகம்.

மேலே உள்ள படத்தின் கணக்குப்படி கேரளா மக்கள் சற்று தெளிவாக இருப்பதாக தோன்றுகிறது. படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்பதாலா? அவசியம் இல்லை. மக்கள் தொகையும் அங்கு குறைவு (பக்கத்தில் மிசோரமும் இருக்கிறதே). அதேபோல, சரியான பதில் தெரிந்தவர்கள் (எந்த மாநிலத்திலும், நாட்டிலும்) அதை அனுபவரீதியாக தெரிந்துவைத்துள்ளனர் என்றும் தீர்மானிக்க முடியாது. வழிவழியாக வரும் பல கேள்விகேட்காத விஷயம் போல அவர்களுக்கு இதுவும் புகட்டப்பட்டிருக்கலாம்.

இல்லை, எங்காவது படித்ததை அப்படியே மனதில் எடுத்துக்கொண்டிருக்கலாம்.

ஆதாரம்:

[1] ‘Breaking Out of the Pocket’ by Peter Boone and Simon Johnson, Brookings Global Economy and Development Conference, May 2008 | மொத்த கட்டுரையும் pdf வகை கோப்பாக [தரவு செய்ய]