கீழே உள்ள அட்லாண்டிஸ் எனும் நாஸா விண்வெளி ஊர்த்தியிலுள்ள (space shuttle) ஓட்டுநர் அறையின் (cockpit) புகைப்படத்தை பாருங்கள். படம் மார்ச் 2000த்தில் நாஸாவின் வலைத்தளத்தில் வெளியானது. இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்தவுடன் சட்டென்று உங்களால் கூற முடியுமா?
ஓட்டுநர் அறையில் பளீரென்று விளக்குகள் எரிகிறது. அப்படியெனில் படம் பிடித்த காமிரா மிகத்துரிதமாக திறந்துமூடும் வேகத்துடன் இயங்கும் ஷட்டரை கொண்டதாக இருக்கவேண்டும். இல்லாவிடில் விளக்கொளி அதிகம் பட்டு படம் வெளிறிவிடும். அப்படியெனில், ஜன்னல் வழியாக எப்படி நட்சத்திரங்கள் தெரிகிறது? அவைகளை படம் பிடிக்க சற்று மிதவேகத்தில் இயங்கும் அபர்சர்-ஷட்டர் கொண்ட காமிரா வேண்டுமே.
போகட்டும். முதலில் படத்தில் எப்படி அய்யா ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் தெரிகிறது. அறையினுள் வெளிச்சம் மிகுதியாக இருக்கையில், துரிதகதி ஷட்டரை கொண்ட காமிராவில் படம்பிடிக்கையில், கண்ணாடி ஜன்னல்கள் அநேக விளக்கொளியை அறையினுள்ளேயே தெரிவது போல பிரதிபலித்துவிடுமே. கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விமானத்தினுள்ளிருந்தும், ஹோட்டல் அறையினுள் இருந்தும் எத்தனை முறை நாம் இப்படி சொதப்பலாக படம் பிடித்துள்ளோம். இவர்கள் மட்டும் எப்படி கனகச்சிதமாக எடுத்துள்ளார்கள்?
இன்னொரு விந்தை. ஜன்னலுக்கு வெளியே, விண் ஊர்த்திக்கு மிக அருகே நம் பூமி தெரிகிறது. இப்படி ஒரு தருணம் விண்வெளிஊர்த்தியின் பயணத்தில் நிகழலாம். ஆனால் பூமியின் (சூரியனிடமிருந்து) பிரதிபலிப்பு ஒளி மிக அதிகம். இவ்வளவு அருகில் இருந்தால் பின்வானம் கருத்து அதற்கு மிக அருகில் ஜன்னலில் நட்சத்திரங்கள் தெரியாது. பூமியின் வெளிச்சம் படத்தில் அவற்றை மறைத்துவிடும்.
அப்படியென்றால் நாஸாவில் யாரோ ஒருவர் வேண்டுமென்றே போலிப்படம் தயாரித்து நம்மை ஏமாற்றியுள்ளார்களா?
அவசரப்பட்டு நாஸாவைப் பற்றி ஏதாவது நாகூசாமல் நாம் சொல்வதற்கு முன், அவர்களே விக்கிபீடியாவில் இப்படத்தை வைத்துள்ளார்கள். அங்கு ஓரமாக this is a composite image என்று எழுதியுள்ளார்கள். அதாவது, பல (வேறு) படங்களின் ஒட்டு.
படத்தை நன்றாக பார்த்தால் ஓட்டுநர் ஊர்த்தியை கட்டுப்படுத்தி ஓட்ட உபயோகிக்கும் ”செலுத்தும் குச்சி” (control stick) கூட படத்தில் உள்ள ஓட்டுநர் அறையில் இல்லை என்று தெரியும். வருடம் 2000த்தில், எதிர்காலத்தில் தங்கள் விண் ஊர்த்தியின் ஓட்டுநர் அறையின் புதியமாதிரி வடிவமைப்பு எப்படி இருக்கும் என்று விவரிக்கையில் ஒரு வாசகர் (பணம் போட்டவர்கள்?) பிரமிப்பிற்காக இப்படி செய்திருக்கிறார்கள்.
(தற்போது (2008) இந்த மாதிரி அறை வடிவமைப்பு நாஸாவின் விண் ஊர்த்திகளில் பொருத்தப்பட்டுள்ளது).
விளம்பர யுகத்தில் இந்த ஜோடனையெல்லாம் சகஜமப்பா என்று (அறிவியல் சிந்தையுடன்) விட்டுவிடுவோம்.
[ஆதாரம்]