ஞாயிறை முன்னிட்டு ஒரு சிறிய, மென்மை அறிவியல் பதிவு. கீழே உள்ள வீடியோவை பார்த்துக்கொண்டே கேளுங்கள். சில நொடிகளே பிடிக்கும். செய்துவிட்டீர்களா? இப்போது கண்ணை மூடிக்கொண்டு, வீடியோவை ஓடவிட்டு மீண்டும் என்ன கேட்கிறீர்கள் என்று பாருங்கள்.
கேள்வி இதுதான்: வீடியோவை பார்த்துக்கொண்டே கேட்டபோதும், பார்க்காமல் கேட்டபோதும், அதில் தோன்றுபவர் என்ன உச்சரித்தார் என்று சொல்ல முடியுமா?
கா கா (ga ga) வா, பா பா (ba ba) வா, இல்லை டா டா (da da) வா?
ஒருவரை பார்த்துக்கொண்டிருக்கையில் அவர் கா கா என்று வாயசைத்துக்கொண்டிருக்கையில், வாயசைப்புடன் ஒத்து பின்னணியில் சத்தம் மட்டும் பா பா (ba ba) என்று வருகிறது என்றால், நமக்கு நம் காதில் அவர் வாயசைத்து நாம் கேட்பதாக நினைப்பது முற்றிலும் வேறான ஒரு சத்தமாக இருக்கும்.
அதாவது, கா கா வும் இல்லாமல் பா பா வும் இல்லாமல், டா டா (da da ) என்று கூறினார் என்று (நாம் கேட்டதாக) நினைக்கத்தோன்றும்.
ஆனால், வாயசைப்பை பார்க்காமல், பின்னணி ஓசையை மட்டும் கேட்கையில், சரியாக பா பா (ba ba) என்று கேட்ப்போம்.
(அப்படியும் வேறு ஏதாவது ஓசை கேட்டால், எதற்கும் காதை ஒருமுறை நன்றாக குடைந்து விட்டு, வேண்டுமானால் தங்கள் பர்சனல் ஈ.என்.டியை ஒரு எட்டு போய் பார்த்து கேட்டு சிந்தி விட்டு வந்து கேட்டுப்பாருங்கள்…)
மேலே வீடியோ பார்த்துக்கொண்டிருக்கையில் டா டா (da da) என்றுதான் உங்களுக்கும் கேட்டிருந்தால் பயப்படாதீர்கள். இந்த விந்தையான கேள்-மாயையை (auditory illusion) 1976இலேயே மனோதத்துவ நிபுணர்கள் அலசி ஆராய்ச்சி கட்டுரை [1] எழுதியிருக்கிறார்கள். இதற்கு பெயர் மெக்குர்க் விளைவு, McGurk Effect [2]. இதைத்தான் மேலே உள்ள வீடியோவில் செய்கிறார். சயிண்டிஃபிக் அமெரிக்கனில் இதைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள் [3]
ஆனால் இந்த மெக்குர்க் விளைவு அனைவரையும் படுத்துவதில்லை. உங்களுக்கு எப்படி செய்து பார்த்தாலும் பா பா (ba ba) என்று தான் காதில் விழுகிறது என்றால், நீங்கள் நூறு பேரில் இருவரில் ஒருவர்.
மற்றொருவர் என் மகள். அவளிடம் சோதனையை செய்ததில், அவளுக்கு பா பா என்றுதான் காதில் விழுவதாக கூறினாள்.
குழந்தைகளே இப்படித்தான். பார்க்கச் சொன்ன வீடியோவையும் சேர்த்து, எதையுமே சரியாக கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
கட்டுரை சுட்டிகள்
[1] http://en.wikipedia.org/wiki/McGurk_effect
[2] Nature in 1976 [Vol 264(5588), pp. 746–748]