எல் கிரக்கோ விடுகதை

Standard

அழகும் அறிவும் பற்றி அருள் பேசிக்கொண்டிருக்கார். சார்ந்ததாக அறிவியல் சிந்தை என்றால் என்ன என்பதை சுவையாக விளக்கும் ஒரு தோற்ற மாயையை இப்பதிவில் தருகிறேன்.

எல் கிரக்கோ (El Greco) பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலிய ரினைஸன்ஸ் காலத்து ஓவியர். இவர் வரைந்த கடைசி கால ஓவியங்களில் ஆண்கள், பெண்கள், குழத்தைகள், தேவதைகள் என்று பாரபட்சமின்றி அனைவரும், நீண்டு உழைக்கும் சுடர்மணி பனியன் போல, நிஜத்தைவிட நீண்டு இழுக்கப்பட்டு ஒல்லியாக இருந்தார்கள் (பார்க்க அருகில்: Adoration of the Shepherds).

327px-adoracion_de_los_reyes_magos1இவ்வோவியங்களை சென்ற நூற்றாண்டின் மத்தியில் பார்த்த இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கண் மருத்துவர் எல் கிரக்கோ இறுதி காலங்களில் கண் நோயால் அவதிப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு மக்களே இப்படித்தான் இழுக்கப்பட்டு தெரிந்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி வரைந்துள்ளார் என்று காரணம் கூறினார்.

பூ, ஓவியம் இவற்றின் அழகை மட்டும் சிந்தனையொதுக்கி ரசித்து (அது எப்படியோ) நாம் ஒதுங்கிவிடாமல் சற்று உஷாரான பார்ட்டியாக விழிப்புடன் இருந்தால் கண் மருத்துவரின் அபத்தமான தர்கானுகூலத்தை கண்டுகொண்டுவிடலாம்.

அறிவியல் சிந்தையும் இதுதான்.

சர் பீட்டர் மெடவார் என்ற (கான்சர் பற்றிய ஆராய்ச்சிக்காக) நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து விஞ்ஞானி மேற்கூறிய விஷயத்தை எழுதி, இப்படி கூறுகிறார்: நமக்கு விஞ்ஞானி ஆவதற்கு போதிய சாமர்த்தியம் இருக்கிறதா என்று பலர் யோசிப்பீர்கள்; உங்களுக்கு மேலே கண் மருத்துவர் கூறும் காரணம், கலையழகை ரசிக்கும் ரசிகஞானத்திலிருந்து மட்டுமல்ல, தர்க்க ரீதியாகவும் அபத்தம் என்று படித்தவுடன் தெரிகிறது என்றால் நீர் அறிவியல் சிந்தையில் கெட்டி. ஏன் அபத்தம் என்று விளக்கிய பிறகும் புரியவில்லையெனின் நீர் மந்தம்.

கண் மருத்துவரது விளக்கத்தில் ஓட்டை என்ன என்று பார்ப்போம்.

தர்க்கத்திற்காக மருத்துவர் கூறுவது போல் ஒரு வியாதி இருக்கிறது என்றும், இதனால் பீடிக்கப்பட்டவர்களுக்கு பார்ப்பது எல்லாம் இரண்டாக தெரியும் என்றும் வைத்துக்கொள்ளுவோம். பார்ப்பதை வரையும் ஓவியர், ஒருவரை இருவராக பார்ப்பதால், இருவராகவே கான்வாசில் வரைகிறார் என்றும் வைத்துக்கொள்ளுவோம். சரி. வரைந்துமுடித்த பிறகு அவரே தன் ஓவியத்தை பார்க்கையில், ஒவியத்தில் இருக்கும் இருவர் நால்வராக தெரிவார்களே. ஓவியத்தின் கோளாறு ஓவியருக்கே விளங்கிவிடும்.

ஒருவரை இருவராய் ஓவியர் பார்த்த நிஜத்துடன் ஒத்துப்போவது போல ஓவியம் சரியாக வரவேண்டும் என்றால் வரைகையிலும் ஒரு ஆளைத்தான் ஓவியர் வரைய வேண்டும். அப்பொழுதுதான் கண் கோளாருடன் இருக்கும் ஓவியருக்கும் ஓவியம் சரியாக இருக்கும். அப்படி அவர் ‘சரியாக’ வரைந்த ஓவியம் பார்க்கும் மற்றவருக்கும் சரியாகத்தான் (ஒரு ஆளாகத்தான்) தெரியும்.

இதைப்போலத்தான் எல் கிரக்கோவின் ஓவியங்களும். அவ்வோவியங்களில் மனித தேவ நீழ்ச்சிகள் எல் கிரக்கோ வேண்டும் என்று செய்ததுதான். அப்படி  நீண்டுதான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று அவர் விரும்பியதால். கண் கோளாறு இருந்திருந்தாலும், அதனால் இல்லை.

இப்படி எழுதிவிட்டு எனக்கு கண் மருத்துவரின் அபத்த விளக்கம் உடனே தெளிந்துவிட்டது என்று சிலுப்பிக்கொள்ளமாட்டேன். சற்று யோசித்தபிறகுதான் புரிந்தது. சற்று யோசித்தபின் நாம் அனைவரும் அறிவியல் சிந்தையுள்ளவர்கள்தான். இப்படிப்பட்ட அறிவியல் சிந்தையை நம் கிராமத்து மூதாட்டியரிடம் நாம் நிறைய பார்த்திருக்கிறோம். வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் நிச்சயம் அவர் சத்தியம் சாஃப்ட்வேர் ஷேர் வாங்கியிருக்க மாட்டார்.

இப்படி அறிவியல் சிந்தையை வளர்த்துக்கொள்வதற்கு அழகு, அறிவு, கலை, அறிவியல் என்றெல்லாம் பிரித்தெழுதி நம்மை நாமே வகுத்துக்கொண்டு நான் கலைஞன், நான் விஞ்ஞானி, நான் எல் கிரக்கோ, நான் கண் மருத்துவர், நான் கடவுள், அப்ப ஆர்யா? என்றெல்லாம் அலைபாயவேண்டியதில்லை.

அழகை, உலகை, அறிவியல் சிந்தையுடன் ரசித்தால் போதும்.

ஆலோசனைகள்

[1] Advice to a Young Scientist – P. B. Medawar

[2] Image Credit: http://en.wikipedia.org/wiki/The_Adoration_of_the_Shepherds_(El_Greco)